பூமியை அச்சுறுத்தி வரும் பருவநிலை சீர்கேட்டை குறைக்கும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) இரவு 8.30 மணி முதல் ஒரு மணி நேரம் தேவையற்ற மின் விளக்குகள் மற்றும் மின் சாதனங்களை அணைத்து வைக்க வேண்டும் என்று மக்களுக்கு தமிழக அரசும், தொண்டு நிறுவனமும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
காலையில் இருந்து சூரிய வெளிச்சத்தினால் ஏற்படும் வெப்பத்தின் தாக்கத்தால் உஷ்ணமான பூமி, இரவு நேரத்தில் தன்னைத்தானே குளிர்வித்துக் கொள்ளும். இதுதான் இயற்கையின் முறை. ஆனால் தற்போதெல்லாம் இரவில் மக்களால் பயன்படுத்தப்படும் மின் சாதனங்களில் இருந்து வரும் வெப்பம், பூமியை குளிர்விக்க இயலாமல் செய்து விடுகிறது. எனவே, பூமியில் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
ஆனால், ஏசி அறையில், குளிர்பதனப் பெட்டியைப் பயன்படுத்திக் கொண்டு நாம் கூறுவது, வர வர வெப்பம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறதல்லவா என்று.. இது என்னவோ நமக்கும், பூமிக்கும் சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தைப் பற்றி கூறுவதைப் போல் கூறுகிறோம். பூமியின் வெப்ப அளவு அதிகரித்ததற்கே நாம்தான் காரணம் என்பதை முதலில் ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும்.
பூமியை மனிதன் பல்வேறு வகைகளில் பாழ்படுத்திவிட்டான். அதில் பூமிக்கு முக்கியமான அச்சுறுத்தலாக இருந்து வருவது சீரற்ற பருவநிலை மாற்றம்தான். இதனை குறைக்க மனிதன்தான் முயற்சிக்க வேண்டும். பூமியின் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் இயற்கை பாதுகாப்பு உலக நிதியம் (டபிள்யு.டபிள்யு.எஃப்.) என்ற தொண்டு நிறுவனம் ஆண்டு தோறும் உலகம் முழுவதும் மின்சாதனங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு நிறுத்தி வைக்கும் விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தி வருகிறது.
அதேபோல இந்த ஆண்டு இன்று (சனிக்கிழமை) உலகம் முழுவதும் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை தேவையற்ற மின் விளக்குகள் மற்றும் மின் சாதனங்களை நிறுத்தி வைக்கும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசின் எரிசக்தித் துறை செயலாளர் டேவிதார் கூறுகையில், தமிழ்நாட்டின் மின்சார பயன்பாடு 2004-ம் ஆண்டில் 38 ஆயிரம் மில்லியன் யூனிட்டாக இருந்தது. அதுவே 2009-ம் ஆண்டு 53 ஆயிரம் மில்லியன் யூனிட்டாக மாறியுள்ளது. இதற்கு தேவையான மின்சாரத்தை நீர் மின்திட்டம், காற்றாலை, சூரிய சக்தி மின் திட்டங்களால் உற்பத்தி செய்வதால் சுற்றுச்சூழல் எந்த விதத்திலும் பாதிக்காது. ஆனால் அனல் மின்நிலையங்கள் மூலம் தான் அதிகமான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது சுற்றுச்சூழலை பாதிக்கக் கூடியது.
ஒரு மின் உற்பத்தி நிலையத்தை உடனடியாக உருவாக்கிவிட முடியாது. அதற்கு 4 முதல் 5 வருடங்களாகும். ஒரு மெகாவாட் உற்பத்திக்கு ரூ.5 கோடி வரை செலவாகிறது. ஆனால் மின் சேமிப்பை சுலபமாக செய்ய முடியும்.
மின் சேமிப்பு இயக்கம் முதன்முதலில் 2007-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஒரு நகரில் தொடங்கப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 6 ஆயிரம் நகரங்களில் நடந்தது. இந்த ஆண்டும் உலகம் முழுவதும் நடத்தப்படுகிறது.
வீடுகள், அலுவலகங்களில் தேவையற்ற மின் விளக்குகள், மின் விசிறிகள், குளிர்சாதன கருவிகள் போன்றவற்றை ஒரு மணி நேரத்திற்கு நிறுத்தி வைப்பது தான் இந்த விழிப்புணர்வு இயக்கத்தின் நோக்கமாகும். இதன் மூலம் மின்சார சேமிப்பு மட்டுமின்றி சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கவும் உதவும். தமிழக மக்களுக்கு இதனை ஒரு வேண்டுகோளாக சொல்கிறோம் என்று அவர் கூறினார்.