நேர்காணலுக்கு செல்லும் பெண்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை
, செவ்வாய், 18 டிசம்பர் 2012 (14:34 IST)
அலுவலகங்களில் பெண்கள் பல வேலைகளை ஆண்களைவிட மிக துரிதமாகவும், அர்பணிப்பு தன்மையோடும் செய்யக்கூடியவர்கள். கொடுக்கப்பட்ட வேலையை முடிப்பதோடு மட்டும் நில்லாமல் தாங்கள் செய்யும் வேலையில் முழு கவனம், பொறுப்பு, சகிப்புத்தன்மை, சக ஊழியர்களுக்கு மரியாதை போன்ற குணங்களில் பெண்களுக்கு நிகர் யாருமில்லை. இந்த பெருமைகள் எல்லாம் ஒரு பெண் வெற்றிகரமாக பணியில் அமர்த்தப்பட்ட பிறகு தான் தெரியவரும். ஆனால் பணியில் அமர்த்த தகுதிகளை சோதிக்கும் நேர்காணலை எதிர்கொள்வதில் ஆண்களை விட பெண்கள் மிகவும் பதற்றம் அடைகின்றனர். தகுதிகளை வெளிக்கொணர வாய்ப்புகள் அளிக்கும் நேர்காணலுக்கு ஒரு பெண் எப்படி தன்னை தயார் செய்து கொள்ளலாம் என்பதை படித்து அறியுங்கள். நேர்காணலுக்கு முன். . . . 1.
நீங்கள் நேர்காணலுக்கு செல்லும் அலுவலகத்தை பற்றி முடிந்தவரை அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளுங்கள். இது இருபாலருக்கும் பொதுவான விஷயம் என்றாலும் நீங்கள் பெண்ணாக இருப்பதால் உங்களிடம் அலுவலக அதிகாரிகள் அதிகமாக எதிர்பார்க்கலாம் 2.
நேர்காணலுக்கு மனதளவில் தயாராகுங்கள். நேர்காணலுக்கு செல்ல வேண்டும் என்ற பதற்றத்தை போக்க நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றை முயற்சிக்கலாம். 3.
நேர்காணலுக்கு செல்வதற்கு முன் சத்துமிக்க உணவை சாப்பிடுங்கள். எண்ணெயில் பொரித்த, காரசாரமான உணவுகளை தவிர்க்கவும். நேர்காணலின் போது. . . . . . . 1.
ஆடை - உங்களை நேர்காணவிருக்கும் அதிகாரிகளுக்கு, நீங்கள் நவநாகரீக மங்கை என்றோ அல்லது கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர் என்றோ நிரூபிக்க தேவையில்லை. எனவே, ஆடையை தேர்வு செய்யும் போது டீசென்டான நிறங்களில் சல்வார் கமீஸ், காட்டன் புடவை, ப்ஹார்மல் ஷர்ட் மற்றும் பான்ட்டுகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள் 2.
அலங்காரம் - ஆடைக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை அணிகலன்களுக்கும் கொடுப்பது அவசியம். நீங்கள் அணிந்திருக்கும் ஆடைக்கு ஏற்ற நகைகளை அணியவும். சிறிய தோடு, வாட்ச், ஒரே ஒரு மோதிரம், மெலிசான செயின் போன்றவை உங்களது தோற்றத்தை மேம்படுத்தும். அடிக்கும் நிறங்களில் இருக்கும் நகப்பூச்சிகளை தவிர்க்கவும். பெயரிய ஹீல்ஸ் உள்ள செருப்புகளை தவிர்த்து கால்களுக்கு வசதியாக இருக்கும் செருப்புகளை தேர்வு செய்யுங்கள். 3.
சிகை அலங்காரம் - நேர்காணால் நாளில் தலைமுடியை அலசி, முடி நன்றாக காய்ந்தபின் போனி டைல் அல்லது பின்னல் போட்டுகொள்வது நல்லது. அலங்கார கிளிப்புகள், பெரிய அளவிலுள்ள பாண்டுகளை தவிர்த்துவிடவும். நேர்காணலுக்கு பின். . . . . 1.
நேர்காணல் முடிந்த பிறகு அங்கு இருக்கும் நபர்களிடம் நீங்கள் கிளம்புவதை தெரிவித்து, தன்னம்பிக்கையோடு கைகுலுக்கிவிட்டு வெளியேறலாம். இந்த குறிப்புகளை பயன்படுத்தினால் அலுவலகத்தில் உங்கள் மீது இருக்கும் மதிப்பு பன்மடங்கு கூடும், இதுவே உங்களுக்கு அந்த வேலை எளிதாக கிடைக்க வழிவகுக்கும்.