விஜயகாந்தால் இனி அரசியல் நடத்த முடியாது : இயக்குனர் சுந்தர்ராஜன்
விஜயகாந்தால் இனி அரசியல் நடத்த முடியாது : இயக்குனர் சுந்தர்ராஜன்
விஜயகாந்தின் அரசியல் காலம் முடிந்துவிட்டது என்று நடிகரும் இயக்குனருமான சுந்தர்ராஜன் பேசியுள்ளார்.
சுந்தர்ராஜன் தற்போது அதிமுகவில் இணைந்து, அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸை ஆதரித்து கைத்தறி நகரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழக முதல்வர் நலமுடன் இருக்கிறார். மக்களால் நான்.. மக்களுக்காக நான் என்று கூறி, மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் ஜெயலலிதா. இது மக்களுக்கும் தெரியும். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போதும், அவர் மக்களைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
விஜயகாந்தும், கருணாநிதியும் மக்களுக்காக அரசியல் நடத்தவில்லை. தங்களுக்கு பதவி வேண்டும் என்பதற்காகத்தான் அரசியல் நடத்துகிறார்கள்.
விஜயகாந்திற்கு எதிர்கட்சி தலைவர் பதவி கொடுத்தும் அவர் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் இழந்துள்ளார். அவரால் இனிமேல் அரசியல் நடத்த முடியாது” என்று அவர் பேசினார்.
விஜயகாந்த் அதிரடி சண்டைக் காட்சிகளில் நடித்துக் கொண்டிருந்த போது, அவரை வைத்து வைதேகி காத்திருந்தாள், தழுவாத கைகள், அம்மன் கோவில் கிழக்காலே போன்ற வித்தியாசமான படங்களை இயக்கி விஜயகாந்தை முன்னனி நடிகனாக்கியதில் சுந்தர்ராஜனுக்கு பெரும் பங்கு உண்டு.
ஆனால், அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக, சுந்தர்ராஜன் அதிமுகவில் இணைந்து விஜயகாந்திற்கு எதிராக பேசிவருவது குறிப்பிடத்தக்கது.