Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னொரு புரட்சியை நிகழ்த்த வேண்டும்: அனிதா மரணம் குறித்து சீமான் ஆவேசம்

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2017 (06:15 IST)
நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பு படிக்க முடியாமல் போன அனிதா மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள், திரையுலகினர் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலோடு, மத்திய மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் அனிதாவின் மரணம் இன்னொரு புரட்சியை ஏற்படுத்த வேண்டுமே தவிர இன்னொரு மரணத்திற்கு வழிவகுத்திட கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:



 
 
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்ற மொழிக்கேற்ப, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் மருத்துவப் படிப்பிற்குரிய கட்-ஆஃப் மதிப்பெண்கள் 196.5 பெற்ற அரியலூர், செந்துறையைச் சேர்ந்த தங்கை அனிதா, நீட் எனும் கொடுங்கோன்மை அநீதித்தேர்வு முறைக்கெதிராக தன்னுயிரை இழந்திருப்பது என்னை ஆற்றாமுடியாத் துயரில் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு மருத்துவராகி எம் மண்ணுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வேண்டிய தங்கமகள் இன்று மண்ணாகிப் போனாளே என்கிற ஆற்றாமையிலும், வேதனையிலும் தமிழ்த்தேசிய இனம் கொந்தளித்துக் கிடக்கிறது.
 
சீமான்தொடக்கம் முதலாகவே தேசிய அளவிலான மருத்துவத் தகுதித் தேர்வான நீட் தேர்வுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியும், இன்னபிற இயக்கங்களும், இனமானத் தமிழர்களும், சமூக ஆர்வலர்களும் போராடி வருகிறோம். நாளை கூட (02-09-17) சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிரானப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை முன்னெடுக்கிறது. மக்களின், மாணவர்களின் தொடர்ச்சியான போராட்டக்குரலுக்கு செவிசாய்க்காத மத்திய அரசும், தமிழக மக்களின் கல்வி, பொருளியல், வாழ்வியல் சூழலைப் புரிந்துகொள்ளாத உச்ச நீதிமன்றமும் தான் தங்கை அனிதாவின் உயிரைக் காவுவாங்கியிருக்கிறது. எத்தனைக் கனவைச் சுமந்து இரவு பகல் பாராது படித்து, கடுமையாக உழைத்து இவ்வளவு உயரிய மதிப்பெண்களை எமது தங்கை பெற்றிருப்பாள் என்று நினைக்கும்போது நெஞ்சம் அடைக்கிறது. இதற்கு மேலும், எவ்வளவுதான் மதிப்பெண் பெறுவது? இந்த மண்ணின் மகளாய் பிறந்ததால் என்னால் மருத்துவராய்க்கூட ஆக முடியாதா என்ற என் தங்கையின் கேள்விகளுக்கு உள்ளமற்ற உச்ச நீதிமன்றமும், மனசாட்சியற்ற மத்திய அரசும், கைப்பாவையாக செயல்படும் கையாலாகா மாநில அரசும்தான் பதில் சொல்ல வேண்டும்.
 
இந்த நீட் தேர்வு முறை எமது தமிழின இளையோரின் மருத்துவக் கனவிற்கு சாவு மணி அடித்திருக்கிறது என்பதைத் தனது உயிரைத் தந்து உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறாள் தங்கை அனிதா. அவரது தற்கொலை எதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும்கூட, அதன்பின்னால் நிற்கிற கேள்விகளுக்குத் தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் பதிலளித்தே தீர வேண்டும். மத்தியிலே மோடி அரசு பதவியேற்றது முதல் தமிழகத்தையும், தமிழர்களையும் அழிப்பதற்கான வேலையைத் திட்டமிட்டு தொடங்கி நடத்தி வருகிறது. இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய முதுகெலும்பில்லாத மாநில அரசு, பதவியைக் காப்பாற்றிக்கொள்வதே தனது உயரிய இலக்காக செயல்பட்டு மக்களின் உயிரோடும், மானத்தோடும் விளையாடிக் கொண்டிருக்கிறது. அதிகாரமும், சட்டமும் கைகோர்த்து நிகழ்த்திய கொடுங்கொலை எம் தங்கை அனிதாவின் மரணம் என உறுதியாக சொல்கிறேன். நீட் தேர்வு முறையை ஒழிக்கத் தமிழின இளையோரும், மாணவரும் உடனடியாகப் போராட்டக்களங்களில் இறங்கி ஜல்லிக்கட்டுக்காக நடந்த தைப்புரட்சி போல, இன்னொரு புரட்சியை நிகழ்த்த வேண்டுமே ஒழிய, உயிரை இழப்பது எதனாலும் சகித்துக்கொள்ள முடியாது. எனது தங்கை அனிதாவைப் பிரிந்து வாடும் எமது பெற்றோருக்கும், உற்றார் உறவினருக்கும் எனது விழிதிரைந்த கண்ணீரைக் காணிக்கையாக்குகிறேன். எனது தங்கை அனிதாவின் மரணம் எந்த நோக்கத்திற்காக நிகழ்ந்ததோ அந்த நோக்கத்தை அவளது உடன்பிறந்தார்கள் நிறைவேற்றி தங்கையின் இலட்சியக்கனவை மெய்ப்படச் செய்வோம் என உறுதியளிக்கிறேன்
 
இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments