அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா பொங்கலுக்கு முன் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
சசிகலா முதல்வர் பதவியை அலங்கரிக்க வேண்டும் என பல அதிமுக அமைசர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பையும், முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்த ஓ.பி.எஸ், அவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அமைச்சர்கள் உதயகுமார், தங்கமணி, செல்லூர் ராஜீ உள்ளிட்ட சிலர் சசிகலா தங்கள் தொகுதியில் போட்டியிட எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளனர். எனவே, இதுகுறித்து மூத்த அமைசர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் சசிகலா தரப்பு தீவிரமான ஆலோனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், அதிமுக மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடந்த 4ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. அந்த கூட்டம் வருகிற 9ம் தேதி வரை நடக்கிறது. அதில், அனைத்து நிர்வாகிகளின் கருத்துகளையும் கேட்ட பின்பு விரைவில் சசிகலா முதல்வராக பதவியேற்பார் எனத் தெரிகிறது
ஏனெனில், சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்குள் சசிகலா முதல்வர் பதவியில் அமர வைக்க வேண்டும் என மன்னார்குடி தரப்பு கருதுகிறதாம். அநேகமாக, பொங்கலுக்கு முன்பு, அதாவது ஜனவரி 12ம் தேதி பௌர்ணமி அன்று, சசிகலா முதல்வர் பதவியை ஏற்க திட்டமிட்டமிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.