விரைவில் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா தரப்பு அணிக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பும், குழப்பமும் எழுந்து வருகிறது. தற்போது அதிமுக சசிகலா பிடியில்தான் இருக்கிறது. அவரின் ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வராக இருக்கிறார். ஆனால், நாங்கள்தான் உண்மையான அதிமுக என ஓ.பி.எஸ் அணி தொடர்ந்து கூறி வருகிறது. மேலும், சசிகலாவை பொதுச்செயலாளராக நியமனம் செல்லாது என தேர்தல் கமிஷனிடம் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் தீர்ப்பு, சசிகலாவிற்கு எதிராகவே வரும் என ஓ.பி.எஸ் அணி திடமாக நம்புகிறது.
சசிகலா நியமனம் செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டால், சசிகலா நியமித்த தினகரனனின் துணைப் பொதுச் செயலாளர் பதவியும் செல்லாது. எனவே, ஓ.பி.எஸ் அணி, பொதுச்செயலாளரை தேர்ந்தெடுத்து அதிமுகவை கைப்பற்றுவதோடு, இரட்டை இலைச் சின்னத்தையும் கைப்பற்ற முயற்சி செய்யும் என செய்திகள் வெளியானது. மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓ.பி.எஸ் அணியும் அறிவித்துள்ளது. எனவே, இரட்டை இலையை யார் கைப்பற்றப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடம் இருந்தது.
இந்நிலையில், தேர்தல் கமிஷனின் தீர்ப்பு, ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பே வருவதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. மேலும், எப்படிப் பார்த்தாலும், இரட்டை இலைச் சின்னம் சசிகலா அணிக்கே கிடைக்கும் என தகவல் வெளியே கசிந்துள்ளது. அது தெரிந்த பின்னர்தான், ஆர்.கே.நகரில் போட்டியிட டி.டி.வி. தினகரன் முடிவெடுத்தாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணிய சுவாமி கூட, இரட்டை இலை சின்னம் சசிகலா அணிக்கு கிடைக்கவே வாய்ப்பு அதிகம் என கூறியிருந்தார்.
இது ஓ.பி.எஸ் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், தேர்தல் கமிஷனின் தீர்ப்பு சசிகலாவிற்கு எதிராகவே வரும். இரட்டை இலையை நாங்கள் கைப்பற்றுவோம் என ஓ.பி.எஸ் அணி கூறி வருகிறது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பல பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் நிகழும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.