ஜெயலலிதா இறப்புக்கு பின் அதிமுக கட்சி காணாமல் போய்விடும் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், சசிகலா அரியணையை கைப்பற்றிய பின்பு தான் ஆட்டம் ஆரம்பித்தது.
ஜெயலலிதா உடன் இருந்த காரணத்துக்காகவே சசிகலா தன்னை தலைவராக முன்மொழியும் போது ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் தீபா வாரிசாக வருவதில் என்ன தவறு இருக்கிறது என்ற மனப்பான்மை கட்சியினருக்கு வந்துவிட்டது. திமுகவில் 90 சதவீத ஆதரவு தீபாவுக்கு இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
தனிக்கட்சி தொடங்குவதை விட அதிமுகவின் தலைமையை கைப்பற்றுவதே சிறந்தது. அதற்கான வாய்ப்புகளை சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நிச்சயம் வழங்கும் என்று தீபா ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த விஷயத்தில் தீபாவுக்கு இன்னும் குழப்பம் நீடிக்கிறது.
சசிகலாவுக்கு அடுத்த செக் ஓ.பன்னீர்செல்வம். கட்சியில் ஓபிஎஸ்சை ஓரம் கட்டி தனிமைபடுத்தும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. இந்த அவமதிப்புகளுக்கு பிறகு ஓபிஎஸ்சுக்கு கட்சிக்குள் ஆதரவு பெருகி வருகிறது. நாளை ஓபிஎஸ்சை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு சசிகலாவை அமர்த்தும் முயற்சிகள் நடந்தால் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெளிச்சத்துக்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இதை விட பெரிய தலைவலியாக சசிகலா குடும்பத்தில் சகோதர யுத்தம் தொடங்கி விட்டது. சசிகலா கட்சி நிர்வாகத்தில் தினகரனுக்கும் வெங்கடேஷுக்கும் முக்கியத்துவம் தந்து வருகிறார். இது நடராஜன் மற்றும் திவாகரனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
இவை அனைத்தையும் மீறி சசிகலாவின் கட்சி மற்றும் ஆட்சி நிலைமை என்னவாகும் என்பது கேள்விக்குறியே.