மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நெருங்கிய தோழி சசிகலா அனைத்து தமிழ் செய்தித்தாள்களிலும் இடம் பெற்றுள்ளது அனைவரது புருவத்தையும் உயரச் செய்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.
ஆனால், ஜெயலலிதா பதவி வகித்த அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு, அடுத்து யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தொண்டர்கள், கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதனிடையே கட்சியின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவுடன் நீண்ட காலமாக உறவில் இருந்துவந்த, அவருடைய தோழி சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கணிப்புகளும், செய்திகளும் ஊடகங்களில் வலம்வரத் தொடங்கியது. ஆனால், இந்த செய்திக்கு பொதுமக்களும், அரசியல் விமர்சகர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
கட்சிக்குள்ளோ, அரசியலுக்குள்ளோ நேரடியாக எந்தவித செயற்பாடுகளிலும் ஈடுபடாத சகிகலா அதிமுக என்ற பெரிய கட்சிக்கு தலைமை வகிப்பதா என்று இணையவாசிகளும் கடுமையாக சாடி இருந்தனர்.
இந்நிலையில், அனைத்து செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களிலும் அதிமுக நிர்வாகிகள் சசிகலா குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து சில நாட்களாக வெளிவரத் தொடங்கி உள்ளது.
‘காலமெல்லாம் அம்மாவை கண் இமை போல் காத்த மதிப்புமிகு சின்ன அம்மா அவர்களே! கழக பொதுச்செயலாளராகவும், ஆட்சியை வழி நடத்திடவும் பதவியேற்க வாருங்கள்’ என்ற ரீதியிலான வாசகங்கள் அடங்கிய விளம்பரங்கள் பெரும்பாலான முக்கிய செய்தித்தாள்களிலும் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.