ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதை இழந்தாவது, முதல்வர் பதவியை கைப்பற்ற வேண்டும். அதற்காகத்தான் இப்படி முன்னுக்கு பின் முரணாகப் பேசுகிறார் என்று நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான விஜயசாந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகை விஜயசாந்தி நிருபர்களிடம் கூறுகையில், “தமிழக அரசியலில் பிரச்சினை செய்துவரும் ஓ.பன்னீர் செல்வம் ஒரு சந்தர்ப்பவாதி. சட்டப்பேரவைத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டபின், முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார். அடுத்த அரசு அமையும் வரை காபந்து முதல்வராக இருங்கள் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
ஆனால், இன்னும் தானே முழுமையான முதல்வர் என்ற நினைப்பில் செயல்பட்டு வருகிறார். சசிகலா பொதுச்செயலாளராகவும், சட்டப்பேரவைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படும் போது அமைதியாக இருந்து, வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார்.
ஆனால், இப்போது தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று மக்கள் மத்தியில் அனுதாப அலையை தேடுகிறார். தானே அரசியலமைப்பு சட்டத்தின் படி தேர்வு செய்யப்பட்டவர் என்று தொடர்ந்து கூறுவது முட்டாள்தனமானது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று கூறி குழப்பத்தை பன்னீர்செல்வம் உண்டாக்கி இருக்கிறார். ஜெயலலிதாவை பார்க்க மருத்துவமனையில் தன்னை அனுமதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது முன்பு கூறிய இவரின் வார்த்தைகளுக்கு முரணாக இருக்கிறது. இப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதை இழந்தாவது, முதல்வர் பதவியை கைப்பற்ற வேண்டும். அதற்காகத்தான் இப்படி முன்னுக்கு பின் முரணாகப் பேசுகிறார்.
ஜெயலலிதா தனது ஆட்சி முழுவதும் திமுக கட்சியை கடுமையாக எதிர்த்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வமோ எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் செயல்பட்டு சதி செய்கிறார். ஜெயலலிதாவின் ஆன்மா கூறியபடி செயல்படுகிறேன் என்று கூறி விட்டு, திமுகவுக்கு ஆதரவாக செயல்பட எப்படி பன்னீர்செல்வத்தால் முடிகிறது?” என்று கூறியுள்ளார்.