கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த தேமுதிக தலைவர்கள் குறிப்பாக விஜயகாந்த் மனைவி பிரேமலதா சமீபகாலமாக தற்கால அரசியல் குறித்து குரல் கொடுத்து வருகிறார். ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் கேப் விட்டிருந்த பிரேமலதா தற்போது மீண்டும் ஆக்ரோஷமாக பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்
அந்த வகையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது பிரேமலதா கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ளாட்சி, இடைத்தேர்தலுக்கு முன் விரைவில் பொதுத்தேர்தல் வர உள்ளது. தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி இல்லை. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்-அமைச்சராக இருந்தால் நல்ல ஆட்சியாக இருக்கும். எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்-அமைச்சர் எப்படி நல்ல முதல்-அமைச்சராக, நிலையான ஒரு முடிவு எடுக்க முடியும். நிரந்தர கவர்னர், நிரந்தர உள்ளாட்சி அமைப்புகளும், நிலையான முதல்-அமைச்சரும் இல்லை. தமிழகத்தில் இந்த நிலை மாறவேண்டும்.
அ.தி.மு.க.வில் விசுவாசத்தின் பேரில் பிரச்சினை நடக்கவில்லை. அதிகாரத்தையும், பதவியையும் யார் பிடிக்க வேண்டும்? என்ற உள்கட்சி பிரச்சினைதான். யாருக்கு முதல்-அமைச்சர், பொதுச்செயலாளர் பதவி என்பதில்தான் 2 அணிகளும் இணைவது பற்றி பேசுகின்றனர். இவர்களுக்கு ஜெயலலிதா மீதோ, கட்சியின் மீதோ விசுவாசம் கிடையாது. இரு அணிகளுக்கு இடையே பதவி போட்டிதான் நடக்கிறது. விவசாயிகள் தங்கள் உணர்வுகளை காட்ட டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது தான் தே.மு.தி.க.வின் விருப்பம்' இவ்வாறு பிரேமலதா கூறியுள்ளார்