அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தமிழக முதல்வர் ஆவதை யாரும் தடுக்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இன்று காலை அதிமுக மூத்த தலைவர்கள் பி.எச் பாண்டியன் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் சசிகலாவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.
ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பு, போயஸ் கார்டன் வீட்டில் யார் இருந்தனர்? ஜெ.விற்கு என்ன நடந்தது என்பது பற்றி விசாரணை செய்ய வேண்டும். டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவர்கள் என்னிடம் கூறினார். அப்போது, சசிகலாவும், சில அமைச்சர்களும் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர். ஆனால், அவர்களிடத்தில் ஒரு சொட்டு கண்ணீர் இல்லை. அவர்களின் முகத்தில் எந்த துக்கமும் இல்லை. இதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.
எந்த பதவியும் தேவையில்லை என மன்னிப்பு கடிதம் கொடுத்த சசிகலா, தற்போது முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுவது அதிர்ச்சியளிக்கிறது என அவர் கூறினார்.
இந்நிலையில், இவருக்கு பதில் அளிக்கும் வகையில், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் “ பி.எச். பாண்டியன் கூறுவது எதிலும் உண்மை இல்லை. அவர் கட்சிக்காக ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை. இரட்டை இலை சின்னத்தை திருமப் பெறும் முயற்சியிலும் அவர் ஈடுபடவில்லை. அவருக்கு மட்டுமில்லாமல், அவரது குடும்பத்தினர் 5 பேருக்கும் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அந்த நன்றி விசுவாசம் இல்லாமல், துரோகிகளுடன் சேர்ந்து அவர் குழப்பத்தை ஏற்படுத்த அவர் முயற்சி செய்கிறார். அதிமுக ஒரு இரும்பு கோட்டை. அதை யாராலும் அசைக்க முடியாது. சசிகலா முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது” என அவர் கூறினார்.