தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்-ஐ மீண்டும் முதல்வர் இருக்கையில் அமர வைக்கும் ஆலோசனையில் நடராஜன் தரப்பு ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியவுடன் அதிமுக 2 அணிகளாக சிதறியது. ஆனால், இறுதில் சசிகலா ஆதரவுபெற்ற எடப்பாடி பழனிச்சாமியே தமிழக முதல்வர் பதவியில் அமர்ந்தார். அதேபோல், சசிகலாவின் நெருங்கிய உறவினரான டி.டிவி. தினகரன் அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், மக்களின் ஆதரவு ஓ.பி.எஸ் பக்கமே இருக்கிறது என்பதை உளவுத்துறை அறிந்தே வைத்திருக்கிறது சசிகலா தரப்பு. மேலும், முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்ட சசிகலாவும் சிறைக்கு சென்றுவிட்டார். எனவே, கட்சியையும், ஆட்சியையும் நிரந்தரமாக கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவெடுத்த சசிகலாவின் கணவர் நடராஜன், இது தொடர்பாக சசிகலாவிடம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
அதாவது, இனி என்ன முயன்றாலும் சசிகலா முதல்வர் ஆக முடியாது. எனவே, கட்சி பதவி மட்டுமே போது. தேவையில்லாமல், மக்களிடம் கெட்ட பெயர் வாங்குவதை விட, சில தியாகங்களை செய்தால் கட்சி மற்றும் ஆட்சியை நம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். மேலும், அப்போதுதான் சசிகலா சிறையிலிருந்து வெளியே வரும்போது, அதிமுக தொண்டர்களின் ஆதரவை பெற முடியும் என நடராஜன் கருதுகிறாராம். இதை சசிகலாவிற்கும் அவர் புரிய வைத்துள்ளாராம்.
இதன் தொடர்ச்சியாக சில அதிரடி திட்டங்களை நடராஜன் தரப்பு கையில் வைத்திருப்பதாக தெரிகிறது. அதில், ஒன்றாக, மக்கள் ஆதரவு பெற்ற ஓ.பி.எஸ்-ஐ மீண்டும் முதல்வராகவும், எடப்பாடி பழனிச்சாமியை துணை முதல்வராக நியமிக்கும் திட்டமும் இருக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளது.