ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக யார் போட்டியிட இருக்கிறார் என்பது இன்று காலை அறிவிக்கப்படவுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்நிலையில், அவர் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார். எனவே, அந்த தொகுதி தற்போது காலியாக இருக்கிறது. வருகிற ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
ஏற்கனவே அறிவித்தபடி ஆர்.கே.நகர் தொகுதியில் தீபா போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். சசிகலா அணி சார்பில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினரன் போட்டியிடுவார் எனக்கூறப்பட்டது. ஆனால், அவர் அங்கு போட்டியிட தயக்கம் காட்டி வருவதாகவும் சில செய்திகள் வெளியானது. அதன் பின் அவர்தான் போட்டியிடுவார் என அதிமுக தரப்பிலிருந்து கூறப்பட்டது.
அதேசமயத்தில் கலைராஜன், ஆதிராஜாராம், கோகுல இந்திரா உள்ளிட்ட பெயர்களும் அடிபட்டது. இந்நிலையில் அதிமுகவின் ஆட்சி மன்ற குழு இன்று காலை கூடுகிறது. அதில், ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் யார் அறிவிப்பு வெளியாகவுள்ளது.