இந்தியாவின் வேளாண் உற்பத்தியும், அது சார்ந்த துறைகளின் வளர்ச்சியும் இந்த ஆண்டில் 3.5 விழுக்காடாக உயரும் என்று வேளாண் அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பவார் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த வேளாண் ஆண்டில் (ஜூலை முதல் ஜூன் வரையிலான ஆண்டு வேளாண் ஆண்டாக எடுத்துக்கொள்ளப்படுகிறது) முதல் காலாண்டில் வேளாண் வளர்ச்சி 2.5 விழுக்காடாகவும், இராண்டாவது காலாண்டில் 4.4 விழுக்காடாகவும் இருந்துள்ளது என்று கூறியுள்ள பவார், நமது நாட்டின் உணவு நிலை பாதுகாப்பாக இருக்கிறது என்றும், கோதுமை, நெல், பருப்பு வகைகள், கரும்பு ஆகியவற்றின் உற்பத்தி மிக நன்றாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
“கோதுமை, அரிசி, பருப்பு வகைகள், கரும்பு ஆகியவற்றின் உற்பத்தியில் பிரச்சனையில்லை. எண்ணெய் வித்துக்களில்தான் கவனம் செலுத்த வேண்டியுள்ளது” என்று கூறியுள்ளார்.
2008-09ஆம் ஆண்டில் 23.44 கோடி டன்களாக இருந்த நமது நாட்டின் ஒட்டு மொத்த உணவுப் பொருள் உற்பத்தி, 2009-10ஆம் ஆண்டில் 21.82 கோடி டன்னாக குறைந்தது. இந்த ஆண்டில் 23 முதல் 24 கோடி மெட்ரிக் டன்னாக உற்பத்தி உயரும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
கோதுமை உற்பத்தி 8.2 கோடி டன்னாக உயரும் என்பதை உறுதியாகக் கூறிய அமைச்சர் பவார், நெல் உற்பத்தி காலம் கடந்த பெய்த மழையாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.