பருவ மழை குறித்த காலத்தையும் தாண்டி நீடித்ததால், வெங்காய பயிர்கள் பெருமளவிற்கு அழுகிவிட்டது என்றும், இதனால் 2010-11ஆம் ஆண்டில் வெங்காய உற்பத்தி 12 விழுக்காடு குறைந்து 1.05 கோடி டன்னாக குறையும் என்று தேச தோட்டக் கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (National Horticulture Research and Development Foundation) கூறியுள்ளது.
நாசிக்கில் உள்ள இந்த அமைப்பின் கூடுதல் இயக்குனர் சத்தீஸ் போண்டே, கடந்த ஆண்டில் வெங்காய உற்பத்தி 1.2 கோடி டன்னாக இருந்தது என்றும், இந்த ஆண்டில் உற்பத்தி 15 இலட்சம் டன்கள் குறையும் என்றும் கூறியுள்ளார்.
நமது நாட்டில் மராட்டியம், கர்நாடக மாநிலங்களில்தான் நாட்டின் தேவையில் 50 விழுக்காடு உற்பத்தியாகிறது. இவ்விரு மாநிலங்களிலும் காலம் கடந்த பெய்த மழையால் வெங்காய உற்பத்தி பெருமளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ள சத்தீஸ் போண்டே, தற்போது வெங்காய விலை திடீரென்று ஏறியதைக் கண்ட விவசாயிகள், முழுமையாக வெங்காயம் பெருகுவதற்கு முன்னரே அவைகளை பறித்தெடுத்து சந்தைக்கு கொண்டு வந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
நமது நாட்டில் வெங்காயம் மூன்று பருவங்களில் பயிர் செய்யப்படுகிறது. முதல் பருவம் கோடை, பிறகு மழைக்காலத்தின் முடிவு, பிறகு குளிர்காலம். இதில் மழைக்கால முடிவை கணித்து பயிரிடப்பட்ட வெங்காய சாகுபடியே பாதிக்கப்பட்டுள்ளது என்று போண்டா கூறியுள்ளார்.