தொழில் துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு மேலும் வழியேற்படுத்தியுள்ள மத்திய அரசு, வேளாண் துறையில் விதைகள் உற்பத்தி, சாகுபடி கருவிகள் தயாரிப்பு ஆகியவற்றில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
தொழில் வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்பு மேம்பாட்டு உள்ளிட்ட பெரும் திட்டங்களுக்கும் அந்நிய நேரடி முதலீடு அவசியம் என்று கூறிவரும் மன்மோகன் அரசு, இன்று அயல் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூலதன பொருட்களை, சம ஒப்பு பங்குகளாக கருத அனுமதியளித்துள்ளது. இதன் மூலம் அயல் நாட்டு நிறுவனம் அல்லது தனி நபர், மூலதன பொருட்கள், இயந்திரங்கள் - அவைகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டவையாக இருந்தாலும் - ஆகியவற்றின் மூலம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது.
இதனை இன்று அறிவித்த மத்திய தொழில் - வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா, அந்நிய நேரடி முதலீட்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட கொள்கை சுற்றறிக்கையை வெளியிட்டார்.
இன்றைய கொள்கை மாற்றத்தினால், அயல் நாட்டுச் சந்தைகளில் இந்திய நிறுவனங்களின் பொருட்களுக்கு நன்கு போட்டியிட உதவும் என்றும், தொழில்நுட்பத் துறையில் பெருமளவிற்கு அந்நிய நேரடி முதலீடு கிடைக்க வழியேற்படும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு மேல் நாட்டில் இயங்கும் நிறுவனங்கள், அந்நிய முதலீட்டாளர்களால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்கள் என்றும், இந்தியரால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்கள் என்றும் இரண்டு பிரிவுகளாக மட்டுமே பார்க்கப்படும் என்று அரசு அறிக்கை கூறுகிறது.
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடு 25 விழுக்காடு குறைந்ததையடுத்து இந்த கொள்கை மாற்றத்தை செய்துள்ளதாக அரசு கூறியுள்ளது.