தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறுவதால் தமிழ்நாட்டில் மீண்டும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டுவரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,
கடந்த டிசம்பர் 13ஆம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் டிசம்பர் 14 முதல் 18ஆம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தேன்.
கடந்த 14ஆம் தேதி முதல் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. 16ஆம் தேதிக்குப் பிறகு மழையின் தாக்கம் குறைந்தாலும் தென் தமிழகம் உட்பட ஒரு சில இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மீண்டும் வலுப்பெறுகிறது. இதனால் டிசம்பர் 21ஆம் தேதி முதல் மழை மீண்டும் துவங்கி சென்னை, கடலூர், காவிரி டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் 28ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக 23ஆம் தேதி முதல் 28 வரை பெரும்பாலான நாட்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கடந்த 13ஆம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் டிசம்பர் 14இல் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தேன். அதேபோல், பாபுவா நியூகினியாவில் 14ஆம் தேதி 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.