தற்போதைய வானிலை கணிப்பின்படி தென் இந்தியாவில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில்,
ஆகஸ்ட் 20 ம்தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழகம் உள்பட ஆந்திரா, ஒரிஸா, கர்நாடாகா, கேரளா ஆகிய பகுதிகளில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தேன். ஆகஸ்ட் 21ம் தேதி முதல் பலத்த மழை பெய்ய துவங்கியது. 25ம் தேதிக்கு பிறகு மழையின் தாக்கம் குறைந்தாலும் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
ஆகஸ்ட் 29ம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதுச்சேரியை மையமாக கொண்டு உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆகஸ்ட் 31ம் தேதி முதல் 6ம் தேதி வரை பெரும்பாலான நாட்களில் வட தமிழகம், வடக்கு ஆந்திரா உள்பட ஆந்திராவின் பெரும்பாலான பகுதி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் மழை மீண்டும் தீவிரமடையும்.
தமிழகத்தின் இதர பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த மழையும், தென் தமிழகத்தில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. செப்டம்பர் மாதம் சென்னை உள்பட வட தமிழகத்தின் சில பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆந்திராவை பொறுத்தவரை வடக்கு ஆந்திரா பகுதியை மையமாக கொண்டு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 20ம் தேதி அறிக்கையில் ஆகஸ்ட் 27ம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தேதியாக தெரிவித்திருந்தேன். அதேபோல் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வோடர் நாட்டில் 7.4 ரிக்டர் அளவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது என்று மழைராஜ் குறிப்பிட்டுள்ளார்.