தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :
கடந்த மார்ச் 25ஆம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் கடிதத்தில் மார்ச் 31 முதல் ஏப்ரல் 5 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தேன். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக ஊட்டி, சேலம், பெரம்பலூர் உள்ளிட்ட ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தூத்துக்குடியை மையமாகக் கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், புதுச்சேரி, சென்னை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், தென் தமிழகத்திலும் நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தற்போது பெய்யும் இந்த மழையானது ஏப்ரல் 9ஆம் தேதி வரை பெய்ய வாய்ப்புள்ளது.
நிலநடுக்க தேதி கணிப்பின்படி ஏப்ரல் 9 அல்லது 13ல் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கடந்த 25ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தேதியாகத் தெரிவித்திருந்தேன். அதேபோல், ஏப்ரல் 3ஆம் தேதி இரவு ஜாவா பகுதியில் 7.1 ரிக்டர் அளவிலும், பிஜு தீவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.