Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காவிரி நீர் மறுப்பு: மத்திய அரசு என்ன செய்கிறது?

Advertiesment
காவிரி நதி தீரம் விவசாயம் சம்பா நெல் சாகுபடி தமிழ்நாடு கர்நாடகா நடுவர் மன்றம் கருணாநிதி பசவராஜ் பொம்மை எடியூரப்பா இடைக்காலத் மேட்டூர் ஹேமாவதி
, வியாழன், 28 அக்டோபர் 2010 (18:57 IST)
FILE
தமிழ்நாட்டில் காவிரி நதியின் நீரை மட்டுமே நம்பி, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிருக்கு தண்ணீர் விடுமாறு தமிழக அரசு விடுத்த கோரிக்கையை மறுத்துள்ளது கர்நாடக அரசு.

காவிரியில் தண்ணீர் விடக்கோரி தமிழக முதலமைச்சர் விடுத்த வேண்டுகோள் குறித்து பரிசீலிக்க அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ‘ஆலோசனை’ நடத்தி இந்த அறிவிப்பைச் செய்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு தமிழக முதல்வரும், சமீப காலமாக அவர் கடைபிடித்துவரும் பாணியில், பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை வைத்து கருத்து எதையும் தெரிவிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அத்தோடு நின்றுவிடாமல், இப்பிரச்சனையை சட்டப்படி சந்திப்போம் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே, இந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் (காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி) தமிழ்நாட்டிற்குத் திறந்தவிட வேண்டிய தண்ணீர் அளவை கர்நாடகா காவிரியில் திறந்து விடாத காரணத்தாலும், மேட்டூர் அணையில் போதுமான அணையில் போதுமான நீர் இருப்பு இல்லாத காரணத்தினாலும் குறுவை நெல் சாகுபடிக்கு ஜூன் 12ஆம் தேதி நீர் திறந்துவிடப்படவில்லை. மிகத் தாமதாகமாக ஆகஸ்டில்தான் நீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் சற்றேறக்குறைய 4 இலட்சம் ஹெக்டேரில் பயிரிடப்படும் குறுவை, இந்த ஆண்டில் வெறும் 40 ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே பயிரிடப்பட்டது.

குறுவை போகட்டும், சம்பாவில் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்த காவிரி தீரத்து விவசாயிகளுக்கு மேலும் ஒரு இடியாக விழுந்துள்ளது கர்நாடக அரசு நேற்று விடுத்துள்ள பதில்.

இத்தனைக்கும், காவிரியின் மீதுள்ள, மிக அதிக அளவிற்கு கொள்ளளவு கொண்ட கிருஷ்ண ராஜ சாகர் அணையில் அதன் முழு அளவிற்கு (124.8 அடி) நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில், “அணை முழுவதும் நிரம்பினால், பிறகு உபரி நீர் தமிழகத்திற்குத்தானே திறந்துவிடப்படும்” என்று அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளது அடி முட்டாள்தனமானது, கடும் கண்டனத்திற்குரியது.

இங்கு மற்றொரு விடயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கிருஷ்ண ராஜ சாகர் அணை நிரம்பியுள்ளது என்றால், காவிரியில் மேல் பகுதியில் கட்டப்பட்டுள்ள ஹேமாவதி, ஹாரங்கி அணைகளும் முழு அளவிற்கு நிரம்பியுள்ளது என்று பொருள். கபினியும் நிரம்பியுள்ளது. ஆக காவிரியின் மீதுள்ள அனைத்து அணைகளிலும் முழு அளவிற்குத் தண்ணீர் உள்ள நிலையில் கர்நாடகம் இவ்வாறு கூறுகிறதென்றால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்திடம் தமிழ்நாடு யாசிக்கவில்லை. 1991ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற்ம் அளித்த இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில்தான் என்பது தெரிந்திருந்தும், “கூடுதலாக வரும் நீர் தமிழகத்திற்குத்தானே திறந்துவிடப்படும” என்று ஏளனமாகக் கூறியுள்ளார் அம்மாநில அமைச்சர். இதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் இல்லை. அவருடைய அரசியலிற்கு தமிழ்நாட்டின் விவசாயி பாதிக்கப்படுவது குறித்து எந்தக் கவலையும் இல்லை. சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்றால், அதுவரை சம்பாவிற்கு எங்கிருந்து தண்ணீர் கிடைக்கும்?

webdunia
FILE
அப்படி கேட்டால், “அதான் பசவராஜ் பொம்மை கூறியுள்ளாரே, கூடுதலாக நீர் வந்தால் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடுவதாக” என்று தமிழக முதல்வர் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சில மாதங்களுக்கு முன்பு கூட, காவிரியில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைசூர் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டு, அதன் காரணமாக கிருஷ்ண ராஜ சாகர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டபோது, அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த தமிழக முதல்வர், பிறகு ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது, அங்கு (கர்நாடகத்தில்) மழை பெய்தால் தானே அவர்களால் தண்ணீரை திறந்துவிட முடியும் என்று பேசினார்! இவர் பேசும்போது, தமிழ்நாட்டிற்கு திறந்துவிடும் அளவிற்கு கே.ஆர்.சாகரிலும், கபினியிலும் நீர் மட்டம் உயர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைக்கு 10 இலட்சம் ஹெக்டேருக்கு மேல் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தேவையான தண்ணீரை, காவிரி நடுவர் மன்றம் (Cauvery River water Disputes Tribunal) அளித்த இடைக்காலத் தீர்ப்பின்படி (காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை கர்நாடகம் உள்ளிட்ட எந்த மாநில அரசுகளும் ஏற்றுக் கொள்ளாத நிலையில்) தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டும். அதைக் கேட்டுத்தான் கர்நாடக அரசிற்கும், பிரதமரை சந்தித்த போதும் தமிழக முதல்வர் வலியுறுத்தியதாகக் கூறியுள்ளார்.

இடைக்காலத் தீர்ப்பின் படி திறக்க வேண்டிய நீரின் அளவு

webdunia
FILE
1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் நாள் காவிரி நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பின் படி, ஜூன் முதல் மே வரையிலான நீராண்டில் காவிரியில் 205 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி.= 100 கோடி கன அடி) தண்ணீரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை மத்திய அரசு தனது அரசிதழில் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் நாள் வெளியிட்டது. ஜூன் முதல் ஒவ்வொரு மாதமும் எத்தனை டி.எம்.சி. தண்ணீர் காவிரியில் திறந்துவிடப்பட வேண்டும் என்ற நீராண்டு அட்டவணையையும் அது அளித்தது. இந்த அட்டவணையின் படி ஒரு ஆண்டு கூட தமிழ்நாட்டிற்கு உரிய காலத்தில் கர்நாடக தண்ணீரை திறந்துவிடவில்லை.

மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்த் தகராறு சட்டம் 1956இன் படி, உச்ச நீதிமன்ற உத்தரவின் கீழ் நியமிக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுகள் தங்களுடைய உத்தரவிற்கு இணையாணவை என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெரிவித்தப் பின்னரும், அதனை ஒரு முறை கூட கர்நாடக அரசு உரிய காலத்தில் நிறைவேற்றவில்லை. அதிகமாக மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட காலத்தில் பொங்கிவந்த வெள்ள நீரை கணக்கிட்டு தமிழ்நாட்டிற்கு அதிகமாகவே தண்ணீரை திறந்துவிட்டதாகவெல்லாம் கூறி நகைச்சுவை செய்தது.

இப்படி கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும் அடாவடி செய்துவந்த காரணத்தினால்தான் 1998ஆம் ஆண்டு காவிரி நதி நீர் ஆணையம் (Cauvery River Authority) அமைக்கப்பட்டது. பிரதமர் (அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்தார்) தலைமையில் அமைக்கப்படும் இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுவை ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் இருப்பார்கள் என்றும், அதற்கு உதவ மத்திய அரசின் நீர்வளத் துறை செயலர் தலைமையில், சம்மந்தப்பட்ட மாநில நீர்வளத் துறை செயலர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழு (Monitoring committee) அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

பிரதமர் தலைமையிலான இந்த ஆணையம், நீர்வளத்துறை செயலர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழு ஆகியவற்றின் ஒரே இலக்கு: காவிரி நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்வை நடைமுறைப்படுத்துவதே.

webdunia
FILE
இந்த ஆணையமும், கண்காணிப்புக் குழுவும் என்ன செய்துக் கொண்டிருக்கின்றன? என்பதே நமது கேள்வியாகும். நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதத்தில் காவிரியில் தமிழ்நாட்டிற்கு 137 டி.எம்.சி. (10.16+42.76,+54.72+29.36 = 137)தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் இதில் பாதியளவிற்கே கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது. எனவேதான் தமிழ்நாடு கடிதம் எழுதியுள்ளது. தமிழக முதல்வர், பிரதமரிடம் நேரிடையாக இதைத் தெரிவித்துள்ளார். ஆயினும், காவிரி நதி ஆணையம் கூட்டப்படாதது ஏன்? என்பதே கேள்வி. இந்தக் கேள்வியை தமிழக முதல்வர் எழுப்பவில்லை, ஏனென்றும் தெரியவில்லை. இதெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் மறந்துவிட்டதோ எண்ணவோ, அவர்களும் குரல் கொடுக்கவில்லை!

அப்படியானால் காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பிற்கு என்ன பொருள்? இதைதான் தமிழ்நாட்டின் விவசாயி கடந்த 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால் பதிலில்லை. தமிழக முதல்வர் நாட்டின் ஒற்றுமை பற்றிப் பேசுகிறார். சட்ட பூர்வமான உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டு, நாட்டின் ஒற்றுமைக்கு எஙகேயிருந்து முட்டுக்கொடுக்கப்போகிறார்?

மேட்டூர் அணையில் (முழு நீர் கொள்ளளவு 94 டி.எம்.சி.) இருந்து நொடிக்கு 18 ஆயிரம் கன அடி வீதம் ஒவ்வொரு நாளும் (இது நாள் ஒன்றிற்கு (1.5 டி.எம்.சி.) தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே அது கடைமடை வரை சென்று பாயும். காவிரி தீரத்தில் முழு அளவிற்கு சம்பா சாகுபடி நடக்கும். இப்படி குறைந்தது 60 நாட்களுக்கு திறந்துவிட்டாக வேண்டும் (இடையில் மழை பெய்யும் போதெல்லாம் நீர் திறப்பு நிறுத்தப்படும்). ஆனால் மேட்டூரில் போதுமான நீரில்லை. வடமேற்கு பருவமழை முழு அளவிற்கு பெய்யத் துவங்கும்வரை சம்பாவிற்கு ஏது தண்ணீர்?

10 இலட்சம் ஹெக்டேரில் சம்பா பயிருக்கு தண்ணீர் தர கர்நாடகம் மறுக்கிறதென்றால், இங்கிருந்து அந்த மாநிலத்திற்கு எதற்காக மின்சாரம் போக வேண்டும்? இரு மாநிலங்களுக்கு இடையில் என்ன உறவு இருக்க முடியும்? எத்தனை முறை உச்ச நீதிமன்றத்திற்குப் போவது? தமிழக முதல்வர் கருணாநிதி ஒருநாளும் கடிதம் எழுதுவதால் களைத்துவிட மாட்டார். ஆனால் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு என்ன?

காவிரி நதி நீர்ப் பிரச்சனையில் நிரந்தரமான தீர்வும், பகிர்வும் இருந்தும் கர்நாடக அரசு கடைபிடித்துவரும் காட்டுமிராண்டிப் போக்கால், ஈரோடு, சேலம், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை என்று தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் நெல் சாகுபடி சிக்கலுக்குள்ளாகிவருகிறது.

ஆண்டுக்கு ஆண்டு நெல் விளையும் பூமி தரிசாகி வருகிறது. அங்கு விவசாயிகள் குனிந்து குனிந்து விவசாயம் செய்து விளைவித்த பயிரால் தமிழ்நாடு நிமிர்ந்து நின்றது. இன்று நேற்றல்ல, தொன்று தொட்டு வரலாற்றில். அவ்வாறிருக்க, கடந்த கால் நூற்றாண்டுக் காலமாக நெல் சாகுபடி பரப்பும், விளைச்சலும் குறைந்து வருகிறது.

இதை எவ்வாறு எடுத்துக்கொள்வது? விவசாயத்தை சாகடிக்க மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளும் இரகசிய முயற்சியின் முதல் படி என்று கொள்ளலாமா? இல்லையென்றால், இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான வாழ்வாதாரப் பிரச்சனையில் மத்திய அரசு மெளனம் காப்பதேன்? தமிழ்நாட்டின் முதல்வர் நாடகமாடுவது ஏன்? விவசாயம் அழிந்தால் என்ன இருக்கும் தமிழ்நாட்டில்?

மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்ல வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil