விலைவாசியைக் கட்டுப்படுத்த அரிசி, கோதுமை போன்று அழுகும் பொருட்களான காய்கறிகள், பழ வகைகள் போன்றவற்றை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வது சாத்தியமில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மக்களவையில் இன்று விடுக்கப்பட்ட வினாவிற்கு பதிலளித்த உணவு அமைச்சர் சரத் பவார் இவ்வாறு கூறியுள்ளார்.
“காய்கறிகளையும், பழ வகைகளையும் அரசு கொள்முதல் செய்து விற்பது சாத்தியமில்லை. ஆனால், அவைகளின் உற்பத்தியை பெருக்கி, அதன் மூலம் சந்தைக்கு போதுமான அளவிற்கு வருகையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் மூலம் விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்” என்று கூறிய சரத் பவார், வெங்காய விலை உயர்வு தற்காலிகமானதுதான் என்றும், அப்படிப்பட்ட சாத்தியம் அடிக்கடி ஏற்படாது என்றும் பவார் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் வெங்காயம் அதிகம் சாகுபடி செய்யும் மத்திய பிரதேசம், குஜராத், மராட்டியம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிகமான மழை பெய்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது என்றும், அதனாலேயே வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது என்றும் பவார் கூறியுள்ளார்.