விவசாய விளைபொருட்கள் பலவற்றிற்கு காப்பீடு வழங்கும் இந்திய விவசாய காப்பீட்டு நிறுவனம், மருத்துவ, வாசனைத் தாவரங்கள், கரும்பு, தேயிலை, பாஸ்மதி ஆகியவற்றிற்கும் காப்பீடு அளிப்பது பற்றி சிந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
கொல்கட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விவசாய காப்பீட்டு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இதைத் தெரிவித்துள்ளார்.
“அடுத்த சில மாதங்களில் வெளியிடப்படவுள்ள காப்பீட்டுத் திட்டத்தில் இந்த பயிர்கள் எல்லாம் சேர்க்கப்படும் சாத்தியமுள்ளது. இந்தப் பயிர்களுக்கு இருக்கும் தேவையும், உற்பத்தியும் குறித்து விரிவான ஆய்வு செய்த பின்னரே இம்முடிவிற்கு வந்துள்ளோம். மருத்துவ, வாசனைத் தாவரங்களுக்கான காப்பீட்டுத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்” என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
மாம்பழம், பப்பாளி, உருளைக்கிழங்கு, திராட்சை, கோதுமை, தேங்காய், ரப்பர், காகித மரம், உயிரி எரிசக்தி ஆகியனவற்றிற்கு இந்தியா விவசாய காப்பீட்டு நிறுவனம் காப்பீடு அளிக்கிறது. காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்த பல்வேறு மாநில அரசுகளுடன் ஆலோசித்த பின்னர் விரிவான தேச விவசாய காப்பீட்டுத் திட்டத்தை (Modified National Agricultural Insurance Scheme) நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இத்திட்டம் 50 மாவட்டங்களில் ஒரு முன்னோடித் திட்டமாக அடுத்த நிதியாண்டில் நடைமுறைப்படுத்தப்படும்.
இப்புதிய திட்டத்தில் இணையும் விவசாயிகள் துணிந்து சில பயிர்களை சாகுபடி செய்ய வழியேற்படும் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இரண்டு முறைகளில் தனது காப்பீட்டுத் திட்டத்தை இந்நிறுவனம் செய்கிறது. ஒன்று, வங்கிகளில் கடன் பெற்று பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளிடன் கட்டாய காப்பீடும், தங்கள் முதலீட்டில் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் அவர்களாக முன்வந்து செய்துகொள்ளும் காப்பீட்டுத் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.