தற்போதைய வானிலை கணிப்பின்படி, ஏப்ரல் 8ஆம் தேதி முதல் பரவலாக மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,
கடந்த மார்ச் 26 மற்றும் 31ஆம் தேதிகளில் அனுப்பிய கடிதத்தில் மார்ச் 28 முதல் ஏப்ரல் 2 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தேன். அதேபோல், ஏப்ரல் 1 வரை திருச்சி, தஞ்சை, தேனி, நீலகிரி, சேலம், அரியலூர், பெரம்பலூர் உட்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழை பெய்தது.
ஏப்ரல் 2ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடித்து வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி வானிலை கணிப்பின்படி வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலோரப் பகுதிகளில் ஏப்ரல் 8 முதல் பரவலாக ஒரு சில இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனால் பெரும்பாலான கடலோர மாவட்டங்களிலும், சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, நீலகிரி, திருச்சி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.