முந்திரி விவசாயிகளின் உடல் நலத்தை மிகவும் பாதித்த காரணத்திற்காக கேரள அரசால் தடை செய்யப்பட்ட எண்டோசல்ஃபான் எனும் பூச்சிக்கொல்லி இராசயணத்தை நாட்டளவில் தடை செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
எண்டோசல்்பானால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை தேச அளவில் நிரூபித்தால் அதனை அரசு தடை செய்யும் என்று சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்த நிலையில், அதனை தடை செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கோரியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளர் நிர்மலா சீத்தாராமன், “எண்டோசல்ஃபானுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்துகிறோம்” என்று கூறியுள்ளார்.
எண்டோசல்ஃபானுக்கு தேச அளவில் தடை விதிக்க வேண்டும் என்று கோரி அரசியல், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து கேரள முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.