கடந்த ஆண்டு 30 இலட்சம் டன் மாம்பழங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்த உத்தரபிரதேச மாநிலத்தில், இந்த ஆண்டு நிலவிய மோசமான வானிலையால் மாம்பழ உற்பத்தி முக்கால் மடங்கு குறைந்துள்ளது.
துசேரி, லாங்டா, செளசா போன்ற மிக ருசியான மாம்பழங்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் விளைகின்றன. இந்த மாம்பழங்களுக்கு வட இந்தியாவில் பெரும் வரவேற்பு உள்ளது. கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் மாம்பழ உற்பத்தி 30 இட்சம் டன்களாக உயர்ந்தது.
ஆனால் இந்த ஆண்டு மழை குறைவாக பெய்தது மட்டுமின்றி, குளிரும் பனியும் அதிகமாக இருந்ததால், மாம்பழ மலர்கள் பெரும்பாலும் கொட்டிவிட்டன. இதன் காரணமாக இந்த ஆண்டில் மாம்பழ உற்பத்தி 8 முதல் 10 இலட்சம் டன்களாக குறையும் என்று அகில இந்திய மாம்பழ உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் இன்ஸ்ராம் அலி கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் லக்னோவிற்கு உட்பட்ட மலிகாபாத், பக்சி கா தலாப், சஹரான்பூர், சம்பல், அம்ரோஹா, முசாஃபர்நகர், ஆகிய மாவட்டங்களில் பெருமளவிற்கு மாம்பழம் பயிரிடப்படுகிறது.