இந்தியாவில் உரம் பயன்பாடு, விடுதலைப் பெற்ற இந்த 60 ஆண்டுக்காலத்தில் 133 மடங்கு உயர்ந்துள்ளது என்று உலக வங்கி அளித்துள்ள புள்ளி விவரத்தை மத்திய உர அமைச்சகம் தனது இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளது.
1951-52ஆம் ஆண்டில் ஒரு ஹெக்டேருக்கு ஒரு கிலோவிற்கும் குறைவாக இருந்தது, இப்போது ஹெக்டேருக்கு 133 கி.கி. ஆக உயர்ந்துள்ளது. வட இந்திய மாநிலங்களில், குறிப்பாக யமுனா - கங்கை சமவெளியில்தான் மிக அதிகமாக உரம் பயன்படுத்தப்படுகிறது.
உரத்தின் பயன்பாடு அதிகரித்ததன் விளைவாக இந்தியாவின் விளை நில மண் வளம் பெருமளவிற்கு பாதிப்பிற்குள்ளாகியுள்ளது என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆயினும், உலகின் முன்னணி வேளாண் உற்பத்தி நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் உரத்தின் அளவு குறைவாக உள்ளது. எடுத்துக்காட்டாக, சீனாவில் ஒரு ஹெக்டேருக்கு 331.1 கி.கி. உரம் போடப்படுகிறது. ஜப்பானில் ஹெக்டேருக்கு 171.2 கி.கி.மும், வங்கதேசத்தில் 166.2 கி.கி.மும், அமெரிக்காவில் 166.2 கி.கி.மும் போடப்படுகிறது. இஸ்ரேலில் ஒரு ஹெக்டேருக்கு 524 கி.கி. உரம் போடப்படுகிறது.
உரத்தின் பயன்பாடு அதிகரித்ததால் மண் வளம் பாதிக்கப்பட்டதை உணர்ந்த மத்திய வேளாண் அமைச்சகம், மண் வளத்தையும், விளைச்சல் திறனையும் மேம்படுத்த தேச அளவிலான திட்டத்தையும், இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தும் தேசத் திட்டத்தையும் அறிவித்து, நடைமுறைப்படுத்தி வருகிறது என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.