இந்தியாவின் பால் உற்பத்தி அதன் தேவை அதிகரிப்பிற்கு ஏற்ற அளவில் அதிகரிக்கவில்லை என்றும், பால் உற்பத்தியை பெருக்குவதில் கவனம் செலுத்தவில்லையெனில் நாட்டின் தேவையை ஈடுகட்ட எதிர்காலத்தில் இறக்குமதி செய்ய வேண்டிய அபாய நிலை உருவாகும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.
நாடு விடுதலை பெற்றதற்குப் பிறகு பால் உற்பத்தி 6 மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் ஆண்டுக்கு ஆண்டு பால் தேவை 60 இலட்சம் டன் அளவிற்கு அதிகரித்து வருகிறது. ஆனால் பால் உற்பத்தி வளர்ச்சியோ 35 இலட்சம் டன் அளவிற்குத்தான் பெருகி வருகிறது. இதன் விளைவாக, நாட்டின் பால் உற்பத்தி 11.2 கோடி டன்னாக உள்ளது.
ஆனால் 2021-22இல் நமது நாட்டின் பால் தேவை ஆண்டிற்கு 18 கோடி டன்களாக உயரும். அதனை ஈடுசெய்ய வேண்டுமெனில் தற்போது ஆண்டிற்கு 4 விழுக்காடு ஆக இருக்கும் இந்தியாவின் பால் உற்பத்தி பெருக்கம், 5.5 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும். அது அடுத்த 12 ஆண்டுகளுக்கும் தொடர்ந்தால்தான் தன்னிறைவை எட்ட முடியும்.
இது மட்டுமன்றி, இந்தியாவில் நபர் ஒருவருக்கு கிடைக்கும் பால் அளவு ஒரு நாளைக்கு 263 கிராம் ஆக உள்ளது. இது பன்னாட்டு சராசரியை விட 15 கிராம் குறைவாகும்.
மற்றொரு அச்சத்தையும் பொருளாதார அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவைப் போன்ற பால் உற்பத்தியாளர் இறக்குமதியை நாட வேண்டிய நிலை ஏற்பட்டால், அது பன்னாட்டு அளவில் பால் விலையை உயர்த்திவிடும் அபாயமும் உள்ளது என்று ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.