மின்தடை! மின்தடை!! மின்தடை!!! தற்போது எங்கு சென்றாலும் கேட்கக்கூடிய வாசகமாக மாறிவிட்டது. இதில் மிகவும் பாதிப்பிற்குரியவர்கள் விவசாயிகளே! விவசாயிகளின் நிலைமை சொல்லக்கூடிய நிலையில் இல்லை. மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
நான் விடுமுறைக்கு ஊருக்கு சென்றபோது, விவசாயிகளின் எதிர்காலம் பற்றி மிகவும் வேதனையடைந்தேன். காரணம், நானும் ஒரு விவசாய குடும்பத்தைச் சார்ந்தவன். கேட்க யாருமில்லை என்ற அளவிற்கு, விருப்பத்திற்கு மின்விநியோகம் நடைபெறுவதும், மின்தடை ஏற்படுவதும் நடைபெற்றது. இப்படியே சென்றால் விவசாயம், விவசாயிகளின் எதிர்கால நிலை என்னவாகும்?
சரி, விஷயத்திற்கு வருகிறேன். 24 மணி நேரத்தில் பகலில் 3 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமுமாக மொத்தம் 6 மணி நேரம் மின்விநியோகம் நடைபெறுகிறது. பகல் 3 மணி நேரத்தில் என்ன நடக்கிறது? சரியான நேரத்திற்கு மின்விநியோகம் நடைபெறுவதில்லை, அப்படியே நடைபெற்றாலும் முழுவதுமாக 3 மணி நேரம் விநியோகிக்கப்படுவதில்லை. 3 மணி நேரத்தில் எத்தனை மின்தடைகள் ஏற்படுகின்றன தெரியுமா?
முழுமையாகப் பார்த்தால் 3 மணி நேரத்தில் 1 மணி நேரம் கூட மின் விநியோகம் நடைபெறுவதில்லை. அந்த 3 மணி நேரத்தில் எத்தனை மின்தடைகள்? சரி, இது இருக்கட்டும். நள்ளிரவு மின் விநியோகத்தை என்னவென்று சொல்வது? கண்விழித்து நீர் இறைக்கும் விவசாயிகள் வயலில் இருக்கும்போது மின்தடை. என்ன செய்வார்கள்? மீண்டும் மின்சாரம் எப்பொழுது வருமோ என மோட்டார் அருகே காத்துக்கிடக்க வேண்டும். வந்தால் மட்டுமே சாத்தியம். வரவில்லையென்றால் தூக்கமும் போய், தண்ணீரையும் இறைக்காமல் மனவேதனைக்கு உள்ளாகின்றனர்.
ஏற்கனவே, விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவரும் நிலையில், இப்படிப்பட்ட சீரற்ற மின்விநியோகம் விவசாயத்தை வெறுக்கும் நிலைக்கு விவசாயிகளை தள்ளுகிறது. நாட்டின் முதுகெலும்பு விவசாயம், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சை என்ற பொன்மொழிகள் வெறும் ஏட்டிலேயே இருக்கப்போகின்றன. தற்போதைய சூழ்நிலை மிகவும் கவலைப்பட வைக்கிறது. இப்படியே சென்றால் விவசாயம் அழிந்து, உணவிற்காக மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தமிழகம் தள்ளப்படும்.
கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு சர்வ சாதாரணமாக நடைபெறும் இடங்களாக கிராமங்கள் மாறிவிட்டன. பொதுவாக குற்றச்செயல்கள் நகர்ப்பகுதிகளில் மட்டுமே நடைபெறும் என்று சொல்வதுண்டு. ஆனால், தற்போது கிராமங்களில் நிலைமை முற்றிலுமாக மாறிவருகிறது. இத்தனைக்கும் காரணம் மின்சாரம் இல்லை, அதனால் விவசாயம் இல்லை, எனவே உற்பத்தியும் இல்லை, சம்பாத்தியமும் இல்லை. விவசாயிகளுக்கு விவசாயத்தை விட்டால் வேறு என்ன தெரியும்? அடிப்படை தேவையான மின்சாரமே இல்லையென்றால், விவசாயிகள் என்ன செய்வார்கள்? பலர் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் பலர் கடனாளியாகின்றனர். இதன்காரணமாக தற்கொலை சம்பவங்களும் நடைபெறுகின்றன.
எனவே அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து, விவசாயத்தை அழிவுப்பாதையிலிருந்து மீட்டு விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க வேண்டும்.