தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்படும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நவம்பர் 25 முதல் 30 வரை தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று மழை குறித்து ஆய்வு மேற்கொண்டுவரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது :
கடந்த 16 முதல் 18ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் பலத்தமழை பெய்தது. அதன்பிறகு ஏற்பட்ட வானிலை மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுகிறது.
இதுவரை மேற்கொண்ட ஆய்வுக் காலங்களில் நவம்பர் மாதத்தில் கடும் வெப்பமும், பனியும் பெய்வது இதுவே முதல் முறை. நவம்பர் மாதத்தில் 7ஆம் தேதி முதல் 22 வரை உள்ள 15 நாட்களில் தமிழகத்தில் 3 நாள் மட்டுமே பரவலாக மழை பெய்துள்ளது. இதுபோன்ற சூழல் கடந்த சில வருடங்களில் இல்லாத நிலை, ஆனாலும் தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்வதற்கான சூழல் இருந்து வருகிறது.
இந்நிலையில், நவம்பர் 22ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாகைக்கு தென்கிழக்கு திசையில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. இதனால் நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழையும், தமிழகத்தின் பிற பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 23 முதல் கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 25 முதல் மழையின் தாக்கம் அதிகமாக வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.