தற்போதைய வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் வரும் 10ஆம் தேதி முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்பு வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதங்களில் வடகிழக்குப் பருவ மழை காலத்தில் புதுச்சேரியை மையமாகக் கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் எனவும், கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், வட தமிழகத்திலும் குறிப்பிட்ட இடங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது போல தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மேலும், கடந்த அக்டோபர் 23ஆம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் நெல்லூரை மையமாகக் கொண்டு குறைந்த காற்றழுத்த தாழவு நிலை உருவாகும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தேன். தற்போது புதுச்சேரி மற்றும் நெல்லூர் இடையே புயல் கரையைக் கடந்துள்ளது. மேலும் ஆந்திராவில் வடகிழக்குப் பருவ மழை காலத்தில் வரலாறு காணாத மழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தேன்.
நவம்பர் 8ஆம் தேதி கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் கடலூருக்கு தென்கிழக்கு திசையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. இதனால் நவம்பர் 10 அல்லது 11ஆம் தேதி முதல் கடலூர், புதுச்சேரி, திருவாரூர், சென்னை, நாகை, உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், வட தமிழகத்திலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை தேதி கணிப்பின்படி, இந்த பருவ மழை நவம்பர் மாதம் 21 ஆம் தேதி வரை பெரும்பாலான நாட்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா பகுதிகளிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆந்திராவில் நெல்லூர், மச்சிலிப்பட்டினம் பகுதியில் பலத்த மழை நீடிக்கும்.
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழையைப் பொறுத்தவரை நவம்பர் 11 முதல் 21 ஆம் தேதி வரை முக்கிய தேதியாகும்.
வானிலை கணிப்பின்படியும், நிலநடுக்க தேதியின் கணிப்பின்படியும் நவம்பர் 9 அல்லது 12 ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மழைராஜ் தெரிவித்துள்ளார்.