Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மரபீனி மாற்றம் : மலட்டுத் தன்மையை உருவாக்கும்

- க‌தி‌ர்

Advertiesment
மரபீனி மாற்றம் பயிர் மலட்டுத்தன்மை
, வெள்ளி, 22 அக்டோபர் 2010 (17:36 IST)
வேளாண்மைக்கு வந்துள்ள ஆபத்து தொடர்ச்சி...

6. வேற்றின மரபீனிகள் பரவாதிருப்பதற்காக என்ற காரணத்தை முன்வைத்து, பயிர்களுக்கு ஆண் மலட்டுத் தன்மையை உருவாக்கும் தற்கொலை மரபீனிகளையும் மரபீனி மாற்றப் பயிர்களில் புகுத்தி விவசாயிகளுக்கு விற்கிறார்கள். விவசாயிகள் விதைத் தற்சார்பு அடைவதைத் தடுத்துத் தம்மிடமே தொடர்ந்து, அளவுக்கு அதிகமான விலை கொடுத்து, விதைகளை வாங்க வைப்பது அந்நிறுவனங்களின் முக்கிய நோக்கமாகும். அந்தப் பயிர்கள் ஆண் மலட்டுத் தன்மையை மட்டுமின்றி, களைக்கொல்லிகளைத் தாங்கிக் கொள்ளும் மரபீனிகளையும் மகரந்தம் வழியாகப் பரப்புகின்றன.

7. களைக் கொல்லிகளைத் தாங்கும் வண்ணம் மரபீனி புகுத்தப்பட்ட பயிர்கள் உலகிலுள்ள மொத்த மரபீனி மாற்றப் பயிர்களில் முக்கால் பங்கு வகிக்கின்றன. அந்தப் பயிர்களை விளைவிக்கும் விவசாயிகள் பயன்படுத்தும் களைக் கொல்லிகளில் முக்கிய அங்கம் வகிக்கும் இரண்டு நச்சுப் பொருட்கள் க்ல·போசினேட் அம்மோனியமும், க்ள·போசேட்டும் ஆகும். இவையிரண்டும் மிகப்கொடியவையாகும்.

நரம்பு மண்டலம், மூச்சு தொடர்பான உறுப்புகள், இரைப்பை, குடல் தொடர்பான உறுப்புக்கள், ரத்தக் குழாய்கள் தொடர்பான உறுப்புக்கள் ஆகியவற்றிற்கு நஞ்சாகும் வேதிப் பொருட்களுடன் க்ல·போசினேட் அம்மோனியம் தொடர்புடையது. நன்மைதரும் பல பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள், மீன்கள் ஆகியவற்றுக்கும் மண்ணில் வெடியத்தை (நைட்ரஜன்) சேர்க்க உதவும் நுண்ணுயிர்களுக்கும் தீங்கு விளைவிப்பதாகும். ரவுண்டப் களைக்கொல்லியை வழக்கமாகப் பயன்படுத்தும் அளவிலேயே அதில் உள்ள க்ல·போசேட் எனும் நஞ்சு நம் உடல் நலத்தை பாதிக்கக் கூடியதாகும்.

பின், கருக்காலத்தில் (அதாவது, கருவுற்ற பருவத்தின் பிற்பகுதியில்) கருச்சிதைவு தானாக நடப்பதற்கான வாய்ப்புக்களை இரட்டிப்பாக்குகிறது. க்ல·போசேட் பயன்படுத்தியவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்பு மண்டலம், மூளை தொடர்பான நோய்கள் அதிகரித்தன. மண் புகுக்களுக்கும் க்ல·போசேட் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. செல் பிரிதலை குலைக்கும் ஆற்றல் ரவுண்டப்புக்கு உள்ளது. இது மனிதருக்கு நேரக்கூடிய புற்றுநோய்களுக்குத் தொடர்புள்ளதாக இருக்கக்கூடும்.

மொத்தத்தில் இவ்விரண்டு நஞ்சுக்களும் மிகக்கொடியவை என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. ஆகையால் இவற்றை அறவே ஒழிக்க வேண்டும்.

8. நோய் உண்டாக்கும் நச்சுயிரிகள் (வைரஸ்கள்), குச்சில்கள் (பேக்டீரியாக்கள்) மற்றும் அவற்றின் மரபீனிகள் ஆகியவையே இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படைப் பொருட்களும் கருவிகளுமாகும். அதேசமயம், இவையே உயிரியியல் போர்முறையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படைப் பொருட்களும் கருவிகளுமாகும். இயற்கை பல கோடி ஆண்டுகளில் உருவாக்கிய பல லட்சக்கணக்கான வகையான நுண்ணுயிரிகள் அனைத்தையும் ஆய்வுச்சாலையில் ஒரு சில நிமையங்களிலேயே உருவாக்கும் தொழில்நுட்பம் மரபீனியியல் வல்லுநர்களிடம் உள்ளது. அப்படிப்பட்ட தொழில்நுட்பம் அந்த வல்லுநர்களுக்குகே தெரியாமல் (தவறுதலாக) அதிதீவிர வல்லமை படைத்த தீய நுண்ணுயிரிகளையும் படைக்கலாமே! ·து வெறும் கற்பனையன்று. 2001ஆம் ஆண்டில் எலிகளில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின்போது எதிர்பாராத விதமாக ஒரு கொடிய நுண்ணுயிரி உருவாக்கப்பட்டது!

வழக்கமாக பெற்றோர்களின் மரபீனிகள் கருவிலுள்ள குழந்தைக்குச் செல்லும். ஆனால், ஒன்றுக்கொன்று வம்சாவளித் தொடர்பு இல்லாத உயிரினங்களுக்கு இடையேகூட மரபீனிகள் இடம்பெயரும் நிலை குச்சில்களில் உள்ளது. இது சமநிலை மரபீனி இடப்பெயர்ச்சி (சநிமஇ) எனப்படும். சமநிலை மரபீனி இடப்பெயர்ச்சியும் மரபீனிச் சேர்க்கையும் பெருமளவில் தொற்றுநோய்கள் பரவ ஏதுவாகும் நுண்ணுயிர்களை உருவாக்குவதற்கான முக்கிய வழிகளாகும். உயிர்த் தொழில்நுட்பம் மூலம் மரபீனி மாற்றம் செய்யும் முறையே இவை நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை மிகவும் அதிகப்படுத்துகிறது.

9. மரபீனி மாற்றப் பயிர்களில் புகுத்தப்பட்ட வேற்றின டீ.என்.ஏ.வை (அந்தப் பயிர்கள் வளர்ந்த) மண்ணிலும் (அந்தப் பயிர்களிலிருந்து உருவான உணவை நாம் உண்ட பின்) நமது குடலிலும் உள்ள குச்சில்கள் உள்வாங்கிக் கொள்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பல நோய்களைப் போக்கப் பயன்படும் எதிர் உயிர் மருந்துகளை எதிர்க்கும் வல்லமை கொண்ட மரபீனிகள் இந்த வகையில் நமக்கு நோய் உண்டாக்கும் குச்சில்களில் புகுந்துவிட்டால் பல நோய்களை குணமாக்குதல் மிகக் கடினமாகிவிடும் பேரபாயம் உள்ளதென்பது இதிலிருந்து தெளிவாகிறது.

10. வேற்றின மரபீனிகளில் உள்ள டீ.என்.ஏ. (மனிதன் உட்பட) பாலூட்டிகளில் ஜீரண உறுப்புக்களைத் தாண்டி வேறு கலங்களின் மரபீனிகளைச் சென்றடையக் கூடியது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், அவை புற்றுநோயை உண்டாக்கக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

மரபீனி மாற்றங்களைப் புகுத்த முனைவோர் அறிவியல் ஆய்வுகளின் போது தமது நோக்கங்களுக்கு எதிரான முடிவுகள் எதிர்ப்பட்டால் அவற்றை மறுத்தல், மூடி மறைத்தல், சாதகமான முடிவுகளையே முன்வைத்தல் முதலானவற்றை நெடுங்காலமாகவே செய்து வருகின்றனர். தமக்கு சாதகம் இல்லாத சோதனைகளைப் பின்தொடர்ந்து செய்து முடிக்காமலிப்பதும் உண்டு. இவை அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து மிக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடுமல்லவா?

மொத்தமாகச் சொல்லப்போனால், மரபீனி மாற்றப் பயிர்களால் விளையக்கூடிய நன்மைகளைவிடத் தீமைகள் பலமடங்கு அதிகமானவையும் மனித குலம் மட்டுமின்றி அனைத்து வகை உயிரினங்களுக்குமே ஈடு செய்ய முடியாத பேரிழப்பை உண்டாக்கக் கூடியவையுமாகும். அதனால் இப்போதே நாம் உறுதியாக நின்று மரபீனி மாற்றப் பயிர்களை எந்த நாட்டிலும் பயிரிடாதிருக்கச் செய்தாக வேண்டும்.

மரபீனி மாற்றப் பயிர்கள் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாவிட்டால் விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாவர் என்றும், உலகெங்கும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும் மரபீனி மாற்றங்களைப் புகுத்த முனைவோர் பயமுறுத்துவது பொய் என்பதை இனிக் காண்போம்.

தற்சார்பு வேளாண்மையின் நன்மைகள்:

உயிர்ம நேயம் கொண்ட தற்சார்பு வேளாண்மையே நமது சூழலையும் அனைவருடைய நலத்தையும் காக்கவல்லது. புதிய தொழில்நுட்பங்கள் இல்லாத வேளாண்மை செய்தால் உணவுப் பஞ்சம் ஏற்படும் எனும் அச்சுறுத்தல் தீய உள்நோக்கம் கொண்டவர்களாலும் முழுமையான, பரந்த அறிவியல் பார்வை இல்லாதவராலும் பரப்பப்படும் வதந்தியே. இதைப் பல நாடுகளில் செய்யப்பட்ட சோதனைகளும் ஆய்வுகளும் நிரூபிக்கின்றன.

1. தற்சார்பு வேளாண்மையில் அதிக விளைச்சலும் உருவாக்கத் திறனும் (Productivity) கிடைக்கின்றன. வளரும் நாடுகளில் இது குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. ·ப்ரிக்கா, ஆசியா மற்றும் மைய தென் அமெரிக்க நாடுகளில் சுமார் மூன்று கோடி விவசாயிகள் ஒரு கோடி ஹெக்டேர் நிலத்தில் இயற்கை வேளாண்மையில் ஈடுபடுகின்றனர். வானவாரி (மானாவாரி) விவசாயத்தில் 50 முதல் 100 விழுக்காடும், பாசன விவசாயத்தில் 5 முதல் 10 விழுக்காடு வரையும் விளைச்சலும் உருவாக்கத் திறனும் அதிகரித்ததாக 89 திட்டங்களின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பர்க்கின·பாஸோ, எத்தியோப்பியா, ஹாண்ட்யூராஸ் மற்றும் க்வாட்டிமாலா நாடுகளில் நிகழ்ந்தவை குறிப்பிடத்தக்கவை.

2. மண் அரிப்பைத் தடுத்தல், மண்ணின் தன்மையை (சத்துக்களை) மேம்படுத்துதல், அதன்மூலமாக மண்ணின் நீர்ப்பிடிப்புத் திறனை அதிகப்படுத்துதல் ஆகியவை தற்சார்பு வேளாண்மையில் இயல்பாகவே நிகழ்கின்றன. அதனால், பயிர்கள் வறட்சியையும் ஓரளவு தாங்க முடிகிறது. குச்சில்கள் (பேக்டீரியா), மண்புழுக்கள், நன்மை செய்யும் பூஞ்சைகள், இன்னபிற அதிகரிக்கின்றன. இவை தாவரங்களில் நோய்களைத் தடுப்பதிலும் சத்துக்களை மறுசுழற்சி செய்வதிலும் பங்காற்றுகின்றன.

தொடரும்...

நன்றி : தாளாண்மை
அறவி வெளியீட்டகம்

Share this Story:

Follow Webdunia tamil