மத்திய அரசு உருவாக்கி, பொது மக்கள் கருத்திற்காக முன்வைத்துள்ள நிலம் கையகப்படுத்தல் தொடர்பான சட்ட வரைவு பொதுப் பயன்பாடு கொண்டதுதானே தவிர, அது எந்த வித்திலும் தனியார் நலனை காப்பதற்கோ அல்லது மேம்படுத்துவதற்கோ அல்ல என்று ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட பல வினாக்களுக்கு பதில் கூறிய ரமேஷ், “என்னைப் பொறுத்தவரை ‘பொது பயன்பாடு’ என்பது உள் கட்டமைப்பு, இரயில்வே, சாலைகள் மேம்பாடு, பாலங்கள் போன்றவைதான். பொது பயன்பாடு என்பது விற்பனைக் கூடங்கள் போன்ற தனியார் அமைப்புக்களின் தனியார் பயன்பாட்டிற்குரியவைகள் அல்ல” என்று கூறியுள்ளார்.
இதுவரை நடைமுறையில் உள்ள 19வது நூற்றாண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டம் இன்றைய தேவையோடு ஒப்பிகையில் அது மிகப் பழமையானதாகவிட்டது. எனவேதான், பொதுப் பயன்பாடு என்பது என்ன என்பதை தெளிவாக வரையறை செய்யும் நில கையகப்படுத்தல் சட்டத்தின் தேவை எழுகிறது என்று ரமேஷ் கூறியுள்ளார்.
புதிய சட்ட வரைவின்படி, தொழில்மயமாதல், நகரமயமாதல் ஆகியவற்றின் பயன் பெருமளவிற்கு மக்களுக்கு பயனளிப்பதாகவே இருக்க வேண்டும் என்பதாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் தொழில்மயமாதல் என்ற வார்த்தைக்குத்தான் அதிகமான எதிர்ப்பும், கேலியும் எழுந்தது.
புதிய சட்ட வரைவின்படி, நிலம் கையகப்படுத்தலால் நிலத்தை இழப்போருக்கு உடனடியாக ஒரு பெரும் தொகையும், பிறகு அடுத்த 20 ஆண்டுகளுக்கு மாதா மாதம் ஒரு தொகையும் வழங்குவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.
புதிய சட்ட வரைவின்படி, எந்த பயன்பாட்டிற்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறதோ, அதே நோக்கிற்காக அந்த நிலம் 5 ஆண்டுக் காலத்தில் பயன்படுத்தப்படாத நிலையில், அதனை யாரிடம் இருந்து பெற்றதோ அவர்களுக்கே திருப்பித் தந்துவிட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் இது தனியார் நோக்கிற்காக நிலம் கையகப்படுத்தலிற்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. இது அரசு கையகப்படுத்தலிற்கு பொருந்தாது என்று கூறுவது ஒரு தலைப்பட்சமாக உள்ளது என்று எதிர்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்த சட்ட வரைவு எந்த விதத்திலும் தனியார் நிறுவனங்கள், தனியாரிடம் இருந்து வாங்கும் நிலங்களுக்குப் பொருந்ததாது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். அதே நேரத்தில் 100 ஏக்கருக்கு மேல் தனியார் நிலம் கையகப்படுத்தினால் அதில் இச்சட்ட வரைவின்படி அரசு தலையிடலாம் என்று உள்ளது.