மத்திய அரசின் சேமிப்புக் கிடங்குகளில் உணவுப் பொருட்கள் பாழாவது குறி்த்து ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்தி வெளியிடுவதாக உணவு அமைச்சர் சரத் பவார் குற்றம் சாற்றியுள்ளார்.
மாநிலங்களவையில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சரத் பவார், அரசுக் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் 11,700 டன்கள் மட்டுமே அழுகி கெட்டுப்போய்விட்டதாகவும், அதன் மதிப்பு ரூ.6.86 கோடி மட்டுமே என்றும் கூறினார்.
உணவுப் பொருட்கள் வீணாவது குறித்து இரண்டு நாட்களாக நாடாளுமன்ற அவைகளில் நடைபெற்ற விவாதங்களில் கலந்து கொண்டு பேசிய உறுப்பினர்கள் பலரும், நாட்டின் ஒரு பகுதி மக்கள் பட்டினி கிடக்கையில், அரசுக் கிடங்குளில் இந்த அளவிற்கு உணவுப் பொருட்களை அழுக விடுவது வெட்கக்கேடானது என்று கூறினர்.
“உணவுப் பொருட்கள் அழுகி வீணாவதாக வந்த செய்திகள் அனைத்துமே சரியானதல்ல. பல செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவையே. அப்படி நடந்த சில இடங்களில், அதற்குப் பொறுப்பான அதிகாரிகளை இடை நீக்கம் செய்துள்ளோம்” என்று சரத் பவார் கூறியுள்ளார்.
மத்திய அரசால் கொள்முதல் செய்யப்படும் உணவு மற்றும் தானியங்கள் 149.4 மில்லியன் டன் அளவிற்கு பாதுகாப்பாக சேமித்து வைக்க ஒரு பெரும் திட்டத்தை தனது அமைச்சகம் உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.