தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்தது யார் என்று தெரிய வந்துள்ளது.
தமிழிசை சவுந்தராரஜன் பாஜக சார்பில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதி மட்டுமில்லாமல், தற்போது அவர் தமிழகத்தின் போட்டியிடும் அனைத்து பாஜக வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அவருடைய செல்போனுக்கு கடந்த 2ஆம் தேதி ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் “நீங்கள் தேர்தல் போட்டியிலிருந்து உடனே விலக வேண்டும். இல்லையெனில் உங்கள் கார் மீது லாரி ஏற்றி கொன்று விடுவோம்’ என்று கொலை மிரட்டல் விடுத்திருந்தனர்.
இதுபற்றி விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்ட எண்ணை வைத்து போலீசார் விசாரணை செய்தார்கள். அப்போது, விருகம்பாக்கத்தை சேர்ந்த பார்த்தசாரதி என்பவரின் மனைவி புவனேஸ்வரி, அவரது மகன் நாகராஜ் மற்றும் அவர் மகள் நாகவள்ளி ஆகிய மூன்று பேர் சிக்கினார்கள்.
விசாரணையில், அலெக்சாண்டர் என்பவரோடு அவர்களுக்கு இருந்த தனிப்பட்ட பகையை மனதில் வைத்து, அவரை சிக்க வைக்க திட்டமிட்டு, அவர்கள் அந்த காரியத்தை செய்துள்ளார்கள் என்று தெரிய வந்துள்ளது.
அவர்கள் குன்றத்தூரில் வசித்த போது ஏற்பட்ட ஒரு பிரச்சனையில் அலெக்சாண்டர் அவர்களுக்கு எதிராக பேசியுள்ளார். எனவே, அரசியல் பிரமுகர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, அதில் அவரை சிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, அலெக்சாண்டர் பயன்படுத்திய செல்போன் எண்ணை தெரிந்து கொண்டு, வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு, அந்த எண் தொலைந்து விட்டதாக கூறியுள்ளனர். அதனால், அவர்களும் அந்த எண்ணின் பயன்பாட்டை துண்டித்து விட்டனர்.
அதன்பின், அதே சிம்கார்டு நிறுவன அலுவலகத்துக்கு சென்று, அலெக்சாண்டர் பயன்படுத்திய அதே எண்ணை வாங்கியுள்ளார்கள். அந்த எண்ணிலிருந்து தமிழிசை சவுந்தரராஜனின் செல்போனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்துள்ளார்கள்.