Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2010 – விக்கிலீக்ஸ்-ன் தகவல் புரட்சி!

2010 – விக்கிலீக்ஸ்-ன் தகவல் புரட்சி!
, வெள்ளி, 31 டிசம்பர் 2010 (18:26 IST)
FILE
2007ஆம் ஆண்டில் கருக்கொண்டு, 2008ஆம் ஆண்டில் புயலாக வெளிப்பட்ட வீட்டுக் கடன் சிக்கல் (Sub Prime Crisis) தங்கள் நாட்டின் வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் முதல் பங்குச் சந்தை வரை மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியபோது கூட, அதனை தாங்கள் கடைபிடித்துவரும் சந்தை பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஒரு எதிர்பாராத அதிர்ச்சியாக எடுத்துக் கொண்ட அமெரிக்க அரசுக்கு, விக்கிலீக்ஸ் வெளியிட்டுவரும் உண்மைகள் அடி வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம், உலகத்திற்கு அது காட்டிக்கொண்டிருக்கும் தூய்மை முகம், எந்தனை கொடூரமானது என்பதை விக்கிலீக்ஸ் வெளியிட்டுவரும் ஆவணங்கள் வெட்ட வெளிச்சமாக்குவதேயாகும்.

உலகின் மாபெரும் ஆட்சி பீடத்தின் மையமாகக் கருதப்படும் வெள்ளை மாளிகைக்கு அமெரிக்காவின் பல்வேறு நாடுகளின் தூதர்கள், அந்தந்த நாடுகளில் இருந்து ‘திரட்டி’ அனுப்பிய இரகசிய அறிக்கைகளை விக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிட்டதன் விளைவாக அந்நாட்டின் உண்மையான நட்பு முகத்தின் யோக்கிதை மட்டுமின்றி, தான் பெற்ற இரகசிய விவரங்களின் மீது நேரிடையாக வினையாற்றாமல், அதனை மறைத்து, அந்தந்த நாடுகளின் அரசுகளை மிரட்ட அந்தத் தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை விக்கிலீக்ஸ் வெளியீடுகள் மூலம் அரசியல் உலகம் புரிந்துகொள்ள வைத்துவிட்டது. அதுதான் அமெரிக்காவிற்கு சங்கடம்.

அமெரிக்காவிற்கு எதிரான இரகசிய பரிமாற்ற அறிக்கைகளை மட்டுமே விக்கிலீக்ஸ் வெளியிட்டவில்லை. மாறாக, அது பல நாடுகள் தொடர்புடைய ஆவணங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. ஆயினும் அது பெரும் அளவில் பாதித்தது அமெரிக்காவையே.

இப்போது கூட, உலகமே நாளை பிறக்கப்போகும் 2011 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்க முற்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அரசும், பேங்க் ஆஃப் அமெரிக்காவும் விக்கிலீக்ஸ் புத்தாண்டில் வெளியிடப்போகும் ஆவணம் என்னவென்பதை நினைத்து அச்சத்தில் உழன்றுக்கொண்டிருக்கின்றன.

இதற்குக் காரணம், கடந்த திங்கட்கிழமை, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிணைய விடுதலையளித்த பிறகு, டைம்ஸ் ஆஃப் லண்டன் நாளிதழிற்கு பேட்டியளித்த விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ், ஒரு மிகப் பெரிய வங்கியின் நிர்வாகிகள் அனைவரும் விலக வேண்டிய அளவிற்கு முக்கிய தகவல்கள் அடங்கிய ஒரு ஆவணத்தை தான வெளியிடப்போவதாக கூறியதுதான்.

பேங்க் ஆஃப் அமெரிக்கா என்று பெயரை ஜூலியன் அசான்ஞ் கூறவில்லை. ஆனால், அந்த வங்கியின் நிர்வாகிகள் ஜூரத்தில் உறைந்துள்ளார்கள். எது தொடர்பான ஆவணம் அது? என்கிற யோசனையில் வாஷிங்டனில் ஆளுக்கு ஆள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் நிலை. அவர்கள் இந்த அளவிற்கு அச்சமுற மற்றொரு காரணமும் உள்ளது. அது, 2009ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரை ஒன்றில், பேங்க் ஆஃப் அமெரிக்காவின் தலைமை நிர்வாகி ஒருவரின் கணினி அமைப்பின் ஹார்ட் டிரைவ் தங்களுக்கு கிடைத்துள்ளதாக அசான்ஞ் கூறியிருந்ததுதான்.

மெர்ரி லின்ஞ் நிதி நிறுவனத்தை கையகப்படுத்தியதில் உள்ள வில்லங்கத்தை விக்கிலீக்ஸ் வெளியிடுமோ என்று மற்றொரு கவலை. இது எல்லாவற்றி்ற்கும் மேலாக அப்படி ஏதேனும் வெளியிடப்பட்டால் அதனால் அமெரிக்காவின் பொருளாதார நிலை என்ன ஆகும் என்ற கவலையும் அமெரிக்க அரசிற்கு ஏற்பட்டுள்ளது.

இப்படி அமெரிக்காவும், அதன் நிறுவனங்களும் திரை மறைவில் நிகழ்த்திய திருவிளையாடல்களின் ஆதாரங்களை வெளியிட்டு, அந்நாட்டு அரசியலில் ஒரு குழப்பமான நிலையை ஏற்படுத்துவதற்கு என்ன அவசியம் உள்ளது? விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ்-ன் நோக்கமென்ன? என்கிற வினாக்களும் எழுகிறதல்லவா?

அமெரிக்காவின் அழுத்தத்தால் சர்வதேச காவல் துறை தனக்கு எதிராக சிகப்பு அறிக்கை வெளியிட்ட நிலையில் மறைந்து வாழ்ந்துவந்த ஜூலியன் அசான்ஞ்ஞை, நியூ யார்க்கர் எனும் இதழின் செய்தியாளர் ராஃப்பி காட்சாடெளரியன் என்பவர் சந்தித்துப் பேசியுள்ளார். ஜூலியன் அசான்ஞ் உடன், அவர் பதுங்கியிருந்த சிறு அறையில் (பங்கர்) ராஃப்பியுன் இருந்துள்ளார். அப்போது அசான்ஞ் நோக்கம் குறித்து வினா எழுப்பியுள்ளார்.

அநீதிகளை வெளிப்படுத்தவதே தனது இணையத் தளத்தின் நோக்கம் என்று அசான்ஞ் அழுத்தமாக கூறியதாக தெரிவிக்கும் ராஃப்பி, “இன்றுள்ள நிலையில் மனிதனின் போராட்டங்கள் அனைத்தும் வலதுக்கு எதிரான இடது போராட்டமோ அல்லது நம்பிக்கைக்கு எதிரான பகுத்தறிவின் போராட்டோ அன்று, அது தனி மனிதனுக்கும் அவன் வாழ்வைப் பாதிக்கம் (அரசு) அமைப்புகளுக்கும் எதிரானதே” என்று அசான்ஞ் கூறியதாக தெரிவிக்கிறார்.

webdunia
FILE
“ஆட்சியமைப்புகளின் போக்கை தற்போதுள்ள போக்கிற்கு மாறாக மாற்றியமைக்க வேண்டுமென்று நாம் நினைப்போமானால், அவைகள் மாற்றத்திற்கு தங்களை சற்றும் உட்படுத்திக்கொள்ள தாயாரக இல்லை என்பதை தெளிவாக புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் துணிவாக செயலாற்ற வேண்டும்” என்றும் அசான்ஞ் கூறியதாக ராஃப்பி தெரிவிக்கிறார்.

இப்போது புரிகிறதா, விக்கிலீக்ஸ் வெளியீடுகளின் நோக்கம் என்னவென்பதை? அமெரிக்காவின் செனட்டரும், அவரை வழிமொழிந்த அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவரும், ஜூலியன் அசான்ஞ் ஒரு உயர்தொழில்நுட்ப பயங்கரவாதி என்று கூறியது சற்றும் பொருந்தாக விமரிசனம் என்பது?

அசான்ஞ் மொழியில் தெளிவாக கூறுதெனின், அமெரிக்காவோ அல்லது இன்றைய உலக நாடுகளின் அரசுகளோ இப்போது எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனவோ அந்த போக்கில் இருந்து சற்றும் மாறப்போவதில்லை. இவைகளின் செயல்பாட்டை தலைகீழாக மாற்ற வேண்டுமெனில், அவைகளின் தன்மையைப் புரிந்துகொண்டு துணிச்சலுடன் போராட வேண்டும் என்கிறார். அதற்கு தற்போதுள்ள அதன் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்ய வேண்டும். அதற்குத்தான் இப்படிப்பட்ட வெளியீடுகள். அவைகள் அதன் பிடிமானத்தை பலமிழக்கச் செய்கின்றன.

இந்த முடிவிற்கு ஜூலியன் அசான்ஞ் வரக் காரணமேதுமுண்டோ? தான் மாற்ற நினைக்கும் இன்றுள்ள அரசியலை ஆங்கல மொழிக் கவிஞர் ஜார்ஜ் ஆர்வெல்லின் பாடலை மேற்கோள் காட்டி புரிய வைக்கிறார் அசான்ஞ்.
“பொய்யை உண்மையைப் போல் ஒலிக்கவும், கொலையை மரியாதைக்குரியதாகக் காட்டவும், தூய காற்றிற்குக் கூட நிலைத்தன்மை உண்டு என்று நிரூபிக்கவுமே அரசியல் மொழி வடிவமைக்கப்பட்டுள்ளது” என்கிற ஜார்ஜ் ஆர்வெல்லின் மொழியை இன்றைய அரசியலின் போக்கை சித்தரிப்பதாக அப்பாச்சி வீடியோவிற்கு அளித்த பேட்டியில் அசான்ஞ் கூறியுள்ளார்.

எவ்வளவு ஆழமான உண்மை! விடுதலைப் போராளிகை ‘பயங்கரவாதிகள்’ என்பது, பழங்குடிகளுக்காக போராடுவோரை, அந்த மக்களின் போராட்டங்களை ஆதரிப்போரை, அவர்களின் நியாயத்திற்காக குரல் கொடுப்போரை ‘உள்நாட்டு அச்சுறுத்தல்’ என்பது, தங்களின் அன்றாட வாழ்விற்காக கடலுக்குச் சென்று மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அண்டை நாட்டு கடற்படையினரால் அத்துமீறி வந்து தாக்கப்படும் போது, அவர்கள் ‘சில பேராசை பிடித்த மீனவர்களால் பிரச்சனை ஏற்படுகிறது’ என்று பேசுவது என்று இவை யாவும் ஜார்ஜ் ஆர்வெல் சொல்லும் அந்த அரசியல் மொழிகள்தானே?

இதனை புரிந்துகொண்ட காரணத்தினால்தான் விக்கிலீக்ஸ் வெளியிடும் ஆவணங்களை உலகின் தலைசிறந்த நாளிதழ்களான தி கார்டியன், நியூ யார்க் டைம்ஸ், லீ மாண்ட், எல் பாரிஸ், டெர் ஸ்பீகல் ஆகியன முன்னுரிமை கொடுத்து வெளியிடுகின்றன! இந்த ஏடுகளின் வரிசையில் ஒரு இந்திய நாளிதழ் கூட இடம்பெறவில்லையே என்பது வருத்தம்தான். ஆனால் இங்குதான், அரசின் குரல்களாக இருந்து பத்ம ஸ்ரீ முதல் சிறிலங்க ரத்னா வரை பட்டங்கள் பெற்ற முதன்மை இதழாளர்களை ஆசிரியர்களாக கொண்ட ஊடகங்களும் நாளிதழ்களும் அல்லவா கோலேச்சுகின்றன? அதனால் அந்தப் பட்டியலில் இந்தியா நாளிதழ் ஒன்று இடம்பெறாததில் ஆச்சரியமேது்மில்லை.

ஒரு தனி மனிதராய், உறுதியுடன் நிற்கும் சில தொழில் திறமை கொண்ட இளைஞர்களுடன் இணைந்து இன்றுள்ள அரசுகளுக்கு பாடம் கற்பிக்க புறப்பட்ட ஜூலியன் அசான்ஞ், உண்மையான ஜனநாயகத்திற்கு வழிகோலுகிறார். எனவே, எவ்வித ஐயமுமின்றி, அவரே இந்த ஆண்டின் மிகச் சிறந்த மனிதரே.

விக்கிலீக்ஸ் இணையத் தளம் செய்துவரும் தகவல் புரட்சி தொடரட்டும்... 2011இலும்.

Share this Story:

Follow Webdunia tamil