நமது நாட்டின் விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வையும் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறது மரபணு மாற்றப்பட்ட விதைகள். மண் வளத்தைப் பெருக்கி விவசாயத்தை வளர்த்த நாட்டில் வீரிய விதைகளைக் கொண்டு உற்பத்தியை அதிகரிப்போம் என்கிற மேற்கத்திய வணிக விவசாய அணுகுமுறை இந்தியாவிற்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
வீரிய விதைகள் உருவாக்குவதில் தொடங்கிய வேளாண் ஆய்வு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் முதன்மையான வணிக பார்வைக்கு உள்ளாகியுள்ளது. பி.டி. காட்டன் என்ற பருத்தி, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட இந்தியாவின் சில மாநிலங்களில் பயிரிடப்பட்டு, அது நல்ல மகசூலைத் தந்ததால், விவசாயிகள் பெரு மகிழ்ச்சியுடன் தொடர்ந்து பயன்படுத்த, அடுத்தடுத்த சாகுபடி பொய்த்து மட்டுமின்றி, மண்ணும் கெட்டு விவசாயமே கேள்விக்குறியானது. பல ஆயிரக்கணக்கான விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம் என்று பி.டி. காட்டன் குற்றம் சாற்றப்பட்ட நிலையில், அடுத்ததாக பி.டி. கத்தரிக்காயை - அரசின் ஆதரவுடனும், வேளாண் பல்கலை பேராசிரியர்களின் உதவியுடனும் - திணிப்பதில் வேகம் காட்டி வருகிறது மன்சாட்டோ.
பி.டி. கத்திரிக்காய் என்று கூறப்படும் மரபணு மாற்ற கத்தரி விதையை சாகுபடி செய்தால், அவைகளில் தண்டுப் புழு வராது என்று கூறி, அதைப் பயன்படுத்துமாறு விவசாயம் தெரிந்த விவசாயிக்கு அறிவுரை கூறப்படுகிறது. சமூக ஆர்வலர்களும், மனசாட்சியுடைய அறிவியலாளர்களும், விதை ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், “அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது” என்று மன்சாட்டோவிற்குச் சாதகமாக பேசும் சுற்றுச் சூழல் அமைச்சரைக் கொண்டுள்ள மத்திய அரசால் இந்தியாவின் உழவர் வாழ்விற்கு மேலும் ஒரு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
இதோடு மற்றொரு அபாயமும் எழுந்தது. அது தமிழக அரசிடமிருந்து உருவானது. வேளாண் பல்கலையில் பட்டம் பெற்றப் படிப்பாளிகள் மட்டுமே விவசாயம் தொடர்பான ஆலோசனைகளைக் கூற வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் சட்ட வரைவை தமிழக அரசு இயற்றியுள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உழவில் பிறந்து உழவிலேயே உழன்றுக் கொண்டிருக்கும் நமது நாட்டின் உழவனுக்கு வேளாண் பல்கலையில் படித்தவன் மட்டுமே ஆலோசனை வழங்க வேண்டுமாம். விவசாயம் எனும் மானுடத்தின் பூர்வீகத் தொழில் ஆய்வுக் கூடத்தில் கண்டு பிடிக்கப்பட்டதல்ல என்பதை எதிர்க்கட்சிகள் உணர்த்தியப் பின்பு பின்வாங்கியது தமிழக அரசு. சிறிது காலம் கழித்து வேறொரு வடிவில் மீண்டும் வந்து மிரட்டலாம்.