நாட்டை எதிர்கொள்ளும் எல்லா சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட காங்கிரஸ் கட்சியாலும் ஆட்சியாலும் ஏதும் செய்ய முடியாத பிரச்சனையாக உள்ளது முல்லைப் பெரியாறு.
அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று 2006ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத மன்மோகன் அரசு, அங்கு புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரளாவுடன் பேசவேண்டும் என்று தமிழ்நாட்டிற்கு ஆலோசனை கூறியது. மத்திய ஆட்சியில் உள்ளவர்கள் எந்த ஆலோசனை கூறினாலும் அதற்கு எதிர்ப்புக் காட்டாத அரசியல் சாணக்கியரான தமிழ்நாட்டின் முதலமைச்சர், “ புதிய அணைக்கட்வதற்கான ஆய்வு நடத்த கேரள அரசிற்கு மத்திய அரசிற்கு அனுமதி அளித்திருக்காது என்று நம்புவதாக”க் கூறினார்! அரசியல் ரீதியான சிக்கல் அல்லது பிரச்சனை என்பதே தனது ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுத்தியக் கூடியது என்பது மட்டுமேயன்றி, சிக்கல் என்பதற்கு மக்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனை என்ற அடிப்படையை ஏற்காத தமிழக முதல்வர், உனக்கு நான் சிக்கல் அல்ல, எனது ஆட்சிக்கு நீங்கள் சிக்கல் ஏற்படத்தக் கூடாது என்பதைப் பல்வேறு வழிகளிலும் - அறிக்கை, கடிதம், தொலைபேசிப் பாராட்டு என்று - ஒவ்வொரு நாளும் உணர்த்திவருவதால் தமிழக அரசு மைனாரிட்டியாக இருந்தாலும் பலமாக உள்ளது! இதில் முல்லைப் பெரியாறு அணையென்ன, பாலாறு என்ன, ஈழத் தமிழரின் இனப் படுகொலைதான் என்ன? வரலாற்றில் இல்லாததா புதிதாக நடந்துவிட்டது என்ற ஒரு யோகியுன் அமைதியுடன் மெளனம் காத்து வருகிறார். சட்டப் பேரவையில் இச்சிக்கல்கள் தொடர்பான விவாதங்களைக் கூட தனது சாணக்கியத்தனத்தால் தவிர்த்துவருவது, ‘எப்பாடுபட்டாவது முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்வது எப்படி’ என்பதை மற்ற மாநிலங்களின் முதல்வர்களுக்கு தனது அனுபவத்தால் மிகச் சரியான வழிகாட்டுதலை தமிழக முதல்வர் இந்த ஆண்டிலும் வழங்கியுள்ளார்.