இலங்கையில் ஈழத் தமிழினத்தை இனப் படுகொலை செய்த சிறிலங்கப் படைகள், கச்சத் தீவுக் கடற்பரப்பிற்கு அருகில் வந்த மீன் பிடிக்கும் தமிழ்நாட்டின் மீனவர்களை சுட்டுக் கொல்வது இந்த ஆண்டிலும் தடையற்றுத் தொடர்ந்தது.
நாகை, புதுக்கோட்டை, இராமேஸ்வரம் என்று தமிழ்நாட்டின் மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையில் எங்கு மீன் பிடித்தாலும் வேகமான படகுகளில் வந்து அவர்களைத் தாக்கும் சிறிலங்கக் கடற்படையினர், சமீப காலமாக அவர்களைக் கண்ணியக் குறைவாக நடத்துவதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.ஆடைகளைக் கழற்றச் சொல்வது, கிரீசைச் சாப்பிடச் சொல்வது, அவர்ளை குனியச் சொல்லி பிட்டத்தில் அடிப்பது, கெட்ட வார்த்தைகளால் திட்டுவது, அவர்கள் பிடித்து வைத்த மீன்களைக் கவர்ந்து செல்வது, படகுகளை மோதி சேதப்படுத்துவது, வலைகளைக் கிழித்தெறிவது என்று நடுக் கடலில் தங்களின் காட்டுமிராண்டித்தனத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால், எல்லையைக் காக்கும் இந்தியக் கடலோரக் காவற்படை இந்த ஆண்டிலும், ‘தமிழ் மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டுகொள்ளாத மனப் பக்குவத்துடன் தனது எல்லைப் பாதுகாப்புப் பணியை தொடர்கிறது. இந்த ஆண்டின் மேலும் ஒரு முன்னேற்றம், 12 கடல் மைல் தூரத்திற்கு மேல் சென்று மீன் பிடித்த தமிழக மீனவர்களை இந்தியக் கடலோரக் காவற்படையினர் அடித்து உதைத்துள்ளனர்!12
கடல் மைல்களுக்கு மேல் சென்று நாட்டுப் படகு, இயந்திரப் படகு மீனவர்கள் மீன் பிடிப்பதைத் தடை செய்யும் கடல் மீன் பிடித் தொழில் (முறைபடுத்துதல் மற்றும் ஆளுமை) சட்ட வரைவு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்ட நிலையிலும், அது நடைமுறைக்கு வந்துவிட்டது போல் இந்தியக் கடலோரக் காவற்படை இப்படி ‘கண்ணிய’த்துடன் நடந்துகொண்டது.
கச்சத் தீவை திரும்பப் பெற்று தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முறையிட்டபோது, ‘அது முடிந்துபோன விடயம்’ என்று பதில் கூறி முடித்து வைத்தார் அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா. இலங்கையில் நடந்தது இனப் படுகொலை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் இராசா பேசுயபோது குறிக்கிட்ட மாநிலங்களைவத் தலைவர், இனப் படுகொலை என்ற வார்த்தையை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு கூறி, சிறிலங்க அரசைக் காப்பாற்றுவது இந்தியர்களின் கடமை நிரூபித்தார். இப்படி மக்களைப் பாதித்த ஒவ்வொரு பிரச்சனையிலும் தமிழக, இந்திய அரசுகளும், உலக நாடுகளும், ஐ.நா.வும் இதுநாள்வரை போட்ட வேடங்களையெல்லாம் துகிலிறுத்திக் காட்டியது 2009ஆம் ஆண்டிம் பெருமையே!