வானிலை மாற்றத்தால் அல்ல, அது உலகளாவிய விவகாரம். நமது நாட்டில், அதுவும் தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் நாளுக்கு நாள் மேற்கொள்ளப்பட்டுவரும் சுற்றுலா தொடர்பான கட்டுமானங்களால், அது தொடர்பான வாணிபத்தால், பசுமையான இயற்கைச் சூழல் ஆண்டுக்கு ஆண்டு சுருங்கி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பருவ காலத்தில் மழை பெய்யும் போதெல்லாம் ஆங்காங்கு பெரும் நிலச் சரிவு ஏற்பட்டு, இயற்கை சூழல் சீரழிந்து வருகிறது. நிலச் சரிவுகளால் இந்த மலைப் பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளில் போக்குவரத்துப் பாதிக்கப்படுவதால் வரும் செய்திகளை மட்டுமே பார்த்துவரும் நமக்கு, மக்கள் புழக்கம் குறைவாக உள்ள இடங்களிலும் பெரும் அளவிற்கு ஏற்படும் நிலச் சரிவுகள், மண் அரிப்புகள் ஆகியனப் பற்றி அறியாமல் இருக்கிறோம். ஊட்டி, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் - ஒரு நேரத்தில் நடப்பட்ட யூகாலிப்டஸ் மரங்களால் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, அதனால் பொதுவாக இருக்கக்கூடிய ஈரம் மண்ணில் இல்லாமல் போனதால், லேசான மழை பொழிந்தால் கூட, மேல் மண் அரித்துச் செல்லப்படுகிறது. இதன் காரணமாக மரங்களின் வேர்கள் பிடியற்றுப் போகின்றன. ஓரளவிற்கு பலமான காற்று வீசும் போதும், மழை பெய்வதாலும் மரங்கள் அப்படியோ வேரோடு பெயர்ந்து விழுந்துவிடுகின்றன. பொதுவாக காட்டுப் பகுதிகளில் மரங்களின் கீழ் பல்வேறு படர் தாவரங்கள் வளர்ந்திருக்கும், அவைகள் மரத்திலும் படர்வதுண்டு. ஆனால், யூகாலிப்டஸ் மரங்களை வளர்த்ததால் மண் ஈரமற்றுப் போய் அப்படிப்பட்ட படர் தாவரங்கள் ஏதும் வளர்வதில்லை. ஆங்கிலத்தில் கிரீப்பர்ஸ் என்று அழைக்கப்படும் பற்றுக் கொடித் தாவரங்கள் காட்டுப்பகுதிகளில் அதிகம் வளரும், இவைகளே மலையின் செங்குத்தான பாறைப் பகுதிகளில் தரையிலிருந்து வளர்ந்து பாறைகளில் வேர்விட்டு மேல் நோக்கிப் படரும். இதனால் நிலச்சரிவோ அல்லது பாறைகள் சரிவோ ஏற்படுவதில்லை. மண்ணையும் கல்லையும் இணைத்துப் பிடிக்கும் ஒரு பிணைப்பாக இவைகள் இருக்கும். இப்படிப்பட்ட தாவரங்கள் சபரிமலை செல்லும் மலைப் பாதையில் தொடர்ந்து காணலாம். ஊட்டி, கொடைக்கானலில் இவைகள் இல்லாத காரணத்தால், இம்மலைப் பகுதிகளில் மண் சரிவும், அதன் தொடர்ச்சியாக நிலச் சரிவும் ஏற்படுகிறது.இந்த ஆண்டில் ஊட்டியில் மிக அதிகமான மழை பொழிந்ததன் விளைவாக ஏற்பட்ட நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்டோர் - குடும்பம் குடும்பமாக உயிரிழந்துள்ளனர். காடுகளைக் காப்பதற்கான திட்டம் வகுத்துச் செயல்படுத்தாத ஒரு வனத் துறை நமது நாட்டில் செயல்படுவதை புரியவைத்தது. இயற்கையை காப்பாற்ற வேண்டுமெனில் வனங்களைக் காக்க வேண்டும், வனங்களைக் காக்க அதன் உயிரியல் பரவலைக் காக்க வேண்டும் என்று உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள விழப்புணர்வு நமது நாட்டிலும் பரவ வேண்டும். அது மக்கள் இயக்கமாகப் பரவினால் மட்டுமே நாம் பெற்றுள்ள இந்த இயற்கைச் சூழலை காப்பாற்றித் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.ஆனால், அரசுகளைப் பொறுத்தவரை, வனங்களைப் பற்றியோ, அதனை தொன்றுதொட்டு காப்பாற்றிவரும் பழங்குடியினர் பற்றியோ எந்த அக்கரையும் செலுத்தாது, அங்குள்ள இயற்கை மற்றும் கனிம வளங்களை பிடிங்குவதில் மட்டும் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த முரண்பட்ட ஆளுமையின் விளைவே இன்று சட்டீஸ்கரில் உருவாகியுள்ள பெரும் பிரச்சனையாகும். ஆனால் அதனை மாவோயிஸ்ட், பயங்கரவாதம் என்றெல்லாம் கூறி திசை திருப்பிக் கொண்டிருக்கின்றன மத்திய மாநில அரசுகள்.