நமது நாட்டில்தான் அரசியல், கலை, இலக்கியம், இசை, சினிமா என்று பல்வேறு துறையினருக்கு வழங்கப்படும் விருதுகள் சர்ச்சைக்குள்ளாகி, கேலிக் கூத்தாகி பல ஆண்டுகள் ஆகித் தொடர்கதையானது. ஒரு பக்கம் பெப்சி குளிர்பானத்தில் அந்நிறுவனம் கலக்கும் பூச்சி மருந்தின் அளவு மிக அதிகமானது, அது உடல் நலத்திற்குக் கேடானது என்று அறிவியல் பூர்வமான செய்தி வரும், அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கும், பிறகு அதற்கென்று அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழு, ஆம், அதிக அளவில்தான் பூச்சி மருந்து கலக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையும் கொடுக்கும். நாடாளுமன்ற வளாகத்திலுள்ள சிற்றுண்டி சாலையில் அதனை விற்பதற்கு அவைத் தலைவர் தடையும் விதிப்பார்.
ஆனால் அந்த ஆண்டில் மத்திய அரசு அறிவிக்கும் பாரத விருதுகளில் இரண்டாம் நிலை விருது அந்நிறுனத்தின் முதன்மை செயல் அதிகாரிக்கு வழங்கப்படும். அதனை எந்த ஊடகங்களும் கேள்வி கேட்கவில்லை! இப்படிப்பட்ட முரண்பட்ட நிலைகள் இந்தியாவிற்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால், உலக அளவில் மிகவும் போற்றப்படும் நோபல் பரிசு, இந்த ஆண்டு முதன் முறையாக சர்ச்சைக்குள்ளானது.
அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு வழங்கப்பட்டதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபராக இந்த ஆண்டின் துவக்கத்தில் பதவியேற்ற பராக் ஒபாமா, உலகில் அமைதி ஏற்படுத்துவதற்கு, உலகம் அறிந்துள்ள அளவில் எதுவும் செய்யாத நிலையில் அவருக்கு அமைதிக்கான நோபல் வழங்கப்பட்டது. எந்த அடிப்படையில் பராக் ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என்று கேட்டதற்கு, நார்வேஜியன் நோபல் குழுவின் செயலரான கெயர் லண்ட்ஸ்டாட், இந்த ஆண்டில் ஒபாமாவின் செயல்பாட்டால் ஒரு ‘புதிய சர்வதேசச் சூழல்’ உருவாகியுள்ளது என்று கூறினார். அது என்ன புதிய சர்வதேச சூழல் என்று கேட்டதற்கு, நாடுகளுக்கிடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தவும், அணு ஆயுதங்களைக் குறைக்கவும், அணு ஆயுதமற்ற உலகை உருவாக்குவும், அமைதியை ஏற்படுத்தவும் ஒபாமா ‘முயன்று’ வருகிறார்’ என்றும், எல்லா பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தி வருகிறார் என்றும் லண்ட்ஸ்டாட் பதிலளித்துள்ளார்! இதனை ஒபாமாவின் சாதனைகள் என்றும் கூறிய லண்ட்ஸ்டாட், ஆல்பிரட் நோபலின் உயிலின்படியே தாங்கள் முடிவெடுத்ததாகவும் கூறினார். மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம் ஆகியவற்றிற்கு நோபல் பரிசு பெற்றவர்களை, தங்கள் கண்டிபிடிப்புகளை நிகழ்த்தி 10 முதல் 20 ஆண்டுகளுக்குப் பிறகே - அதன் பயன் உலகறிய உணர்ந்த பின்னரே - நோபல் பரிசிற்கு தேர்வு செய்யும் குழு, ஆட்சிக்கு வந்து ஓராண்டு கூட நிறைவு செய்யாத, பன்னாட்டு அளவில் இதைச் சாதித்தார் என்று எதையும் கூற முடியாத ஒபாமாவிற்கு நோபல் பரிசை அளித்து, அங்கே கூட நம் நாட்டைப் போல் தானா? என்று இந்தியர்கள் கருதும் அளவிற்கு அதன் தரத்தை நோபல் பரிசுக் குழுத் தாழ்த்தியது இந்த ஆண்டின் ஒரு சோக நிகழ்வாகும்.