Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலாதான் ஒரே வழி - ஓ.பன்னீர் செல்வம் அதிரடி

சசிகலாதான் ஒரே வழி - ஓ.பன்னீர் செல்வம் அதிரடி
, ஞாயிறு, 11 டிசம்பர் 2016 (09:36 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக பொதுச்செயளாளர் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து, அதிமுக அடுத்த தலைமை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. முக்கியமாக, அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்பதில் பல்வேறு யூகங்களும் தகவல்களும் பரப்பப்படுகின்றன. 
 
பல வருடங்களாக ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்த அவரின் தோழி சசிகலா அடுத்த தலைமைக்கு வருவார் என்றும், அவரே அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது. ஆனால், அந்த பதவிக்கு போட்டிகள் நிலவுவதாகவும், கட்சியினருக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும் செய்திகள் வெளிவந்தன.
 
இந்நிலையில், அவர் தலைமை பொறுப்பை ஏற்று கட்சியை ஏற்று வழிநடத்திச் செல்ல வேண்டும் என சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட சில அதிமுக நிர்வாகிகள் நேற்று நேரில் சென்று அவரிடம் வலியுறுத்தினர். இது ஒரு பக்கம் இருக்க, 100க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் நேற்று போயஸ் கார்டன் சென்று சசிகலவிற்கு எதிராக கோஷம் போட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.
 
இந்நிலையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்  ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிழலாக இறுதிவரை இருந்து, அவரின் மெய்க்காப்பாளராக, உயிர் காக்கும் தோழியாக, உன்னத சேவகியாக, உறுதுணையாக நிற்கும் தங்கையாகவே வாழ்ந்து வருபவர் எங்களின் பாசத்திற்குரிய சசிகலா. எண்ணில்லாத சோதனைகளையும், வேதனைகளையும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சந்தித்த காலகட்டங்களில், அவருக்கு உற்ற துணையாக இருந்து அந்தத் துன்பங்களை பகிர்ந்து கொண்டவர் சசிகலா. 
 
பொய் வழக்குகள் போடப்பட்டு தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வி சிறைவாசம் மேற்கொண்ட நேரத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் சேர்ந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தவர் சசிகலா. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் இணைந்து நின்று அவரின் சிந்தனையை, செயலாற்றலை, தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருப்பவர் சசிகலா. 
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் போலவே அதிமுக நிர்வாகிகளை, கடைக்கோடி கிராம அதிமுக தொண்டர்களை அறிந்து வைத்திருப்பவர் சசிகலா. எனவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வைத்திருந்த அதே கட்டுக்கோப்புடன் ஒரு ராணுவ அமைப்பு போன்று கட்சியை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னால், அதற்கு ஒரே வழி அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்று வழிநடத்துவது ஒன்றே ஆகும். 

webdunia

 


இந்தக் கருத்துக்கு ஒரு மாற்றுக் கருத்து அதிமுகவில் இல்லை. அப்படி ஒரு மாற்றுக் கருத்து கொண்டிருப்பவர் எவரேனும் இருந்தால், அவர் இந்தக் கட்சியின் தொண்டர் இல்லை. ஜெயலலிதா மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிறைவு செய்திடவே சசிகலாவை அதிமுகவினர் சந்தித்து தலைமை ஏற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். 
 
கடந்த 33 ஆண்டுகளாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர் சசிகலா. அதனால்தான் தன்னைப் பெற்றெடுத்த தாயின் இடத்தை சசிகலா நிரப்பியுள்ளார் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா புகழ்ந்துரைத்தார். 
 
"என் மீதான விசுவாசத்தின் காரணமாகவே, மற்றவர்களால் மிக தவறாக சித்திரிக்கப்பட்ட, புரிந்து கொள்ளப்பட்ட பெண்மணி அவர். எனக்காக அவர் மிகவும் சிரமங்களை அனுபவித்துள்ளார். என்னுடனான நட்பு மட்டும் இல்லை என்றால், அவரை இந்த அளவு யாருமே தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள். என்னுடன் பிறக்காத சகோதரி அவர். என் அம்மாவின் இடத்தை நிரப்பிய பெண் அவர்'' என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே கூறியிருக்கிறார். ஜெயலலிதா மீது சசிகலா கொண்டுள்ள பற்றுக்கும், பாசத்திற்கும் இதைவிட வேறு அத்தாட்சி தேவையில்லை. 
 
சசிகலாவை இகழ்ந்து உரைத்து, ஏளனம் செய்து, மனசாட்சியே இன்றி பொய்யான வதந்திகளைப் பரப்பி, அவரை அரசியலில் ஈடுபட விடாமல் முடக்கி விடலாம் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்படுகின்றன. இந்த முயற்சியில் ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள ஒரிரு எதிர்க்கட்சிகளின் கைவரிசையும் இருக்கிறது என்று நான் சந்தேகப்படுகிறேன். இத்தகைய வதந்தி பரப்பும் செயல்கள் வெற்றி பெறாது; குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற ஆசை நிச்சயம் நிறைவேறாது. 
 
தமிழக மக்கள் அறிவார்ந்தவர்கள். சிந்தனைத் திறம் மிக்கவர்கள். அவர்களை ஏமாற்ற நினைப்பவர்கள்தான் இதுவரை ஏமாந்துள்ளார்கள் என்பது வரலாறு. அந்த வரலாறு இதற்கும் பொருந்தும்” என்று  அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவின் இருக்கையில் அமர்ந்த சசிகலா