கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் வியப்படைந்துள்ளதாக ரஷ்யாவில் உள்ள இந்தியர்களிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறைபயணமாக நேற்று மாஸ்கோ சென்றடைந்தார். விமான நிலையம் சென்றடைந்த அவரை அந்நாட்டு மூத்த துணைப் பிரதமர் டெனிஸ் மான்டுரோவ் வரவேற்றார். பின்னர் அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி ராணுவ மரியாதையும் சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.
இதையடுத்து பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரவு விருந்து அளித்தார். அப்போது இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று ரஷ்ய நாட்டில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். ரஷ்ய மொழியில் இந்தியர்களை வரவேற்று பேசிய மோடி, 140 கோடி இந்தியர்களின் அன்பை பகிர்ந்து கொள்ளவே ரஷ்யா வந்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்தியாவை மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற்றுவதே எனது இலக்கு என தெரிவித்த பிரதமர் மோடி, எனது மூன்றாவது பதவி காலத்தில் இன்னும் மூன்று மடங்கு அதிகமாக உழைக்க இருக்கிறேன் என்றும் கூறினார்.
கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றும் நாடாக இந்தியா உள்ளது என்றும் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் வியப்படைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் ஏழை மக்களுக்கு மூன்று கோடி வீடுகள் கட்டி தர உள்ளதாகவும், மூன்று கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்றி இருக்கிறோம் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.