Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் குற்றங்கள்: இந்திய அரசியல்வாதிகளை விமர்சித்த ஐநா

Webdunia
வெள்ளி, 20 ஜூன் 2014 (11:34 IST)
இந்தியாவில் அதிகரித்து வரும் கற்பழிப்புகள் மற்றும் சிறுமியர்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகளும், நீதித் துறையினரும் தங்களது கடமையில் இருந்து தவறி வருவதாக ஐக்கிய நாடுகள் குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது. 
 
சமீபத்தில், உத்தரப்பிரதேசத்தில் சகோதரிகளான இரு இளம்பெண்கள் கற்பழித்து, கொல்லப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் மனித உரிமை ஆர்வலர்களிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியது. 
 
இச்சம்பவம் தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் சர்வதேச குழந்தைகள் உரிமை கண்காணிப்பு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன் அடிப்படையில், இந்தியாவில் பாலியல் வன்முறை மற்றும் பெரிய அளவிலான புறக்கணிப்புக்கு குழந்தைகள் இலக்காக்கப்படுவதாக ஐநா குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது. 
 
‘22 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிப்புக்குள்ளாவதாக கூறப்படும் இந்தியாவில் கற்பழிக்கப்படும் மூன்றில் ஒருவர் சிறுமிகளாக உள்ளனர். இவர்களை நாசப்படுத்தியவர்களில் சரிபாதிப் பேர் நன்கு அறிமுகமானவர்களாகவோ, நம்பிக்கைக்குரியவர்களாகவோ இருப்பது தெரிய வந்துள்ளது. 
 
சர்வதேச ஊடகங்களில் வெளியாகி உலகின் கவனத்தை ஈர்த்த சம்பவங்களைப் பற்றி மட்டும் நாங்கள் கவலை கொள்ளவில்லை. மாறாக, இது போன்ற பல சம்பவங்கள் உள்ளூர் வீதிகளில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தாமல், அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படாமல், இதன் மூலமாக ஊடகங்களின் பார்வையில் படாமல் பலரது கவனத்தை ஈர்க்க தவறி விடுகிறது. அவற்றைப் பற்றியும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்’ என இந்த கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 
 
குற்ற சம்பவங்கள் தொடர்பான போதிய தொகுப்புகள் இல்லாமை, மத்திய-மாநில அரசுகளிடையே நிலவும் சீரற்ற சட்டங்களும் அவற்றை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகளும் நீதித் துறையும் தங்களது கடமையை நிறைவேற்ற தவறி விடுவது ஆகியவற்றை சுட்டுக்காட்டி இந்த கண்காணிப்பகத்தின் துணை தலைவர் பென்யாம் மெஸ்மர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். 
 
கற்பழிப்பு சம்பவங்களை ‘விபத்து’ என்றும் ‘சில வேளைகளில் சரி - சில வேளைகளில் தவறு’ என்றும் கேலியாக கருத்து கூறிய சில இந்திய அரசியல்வாதிகளுக்கு கண்டனம் தெரிவித்தும், பெண் சிசுக் கொலை, பெண்களை புறக்கணித்து கைவிடுதல், பெண் கருக்கலைப்பு ஆகியவற்றை தடுக்க இந்தியா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!