இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பகுதியான கோலன் ஹைட்ஸ் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலுக்கு தயாராகி வருவதால் மத்திய தரைக்கடல் பகுதியே பரபரப்பாகி வருகிறது.
இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த ஒரு ஆண்டு காலமாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இதில் பாலஸ்தீனியர்கள் அதிகம் வசித்த காசா பகுதியை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில் 38 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக லெபனான் எல்லையில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் - இஸ்ரேல் எல்லை வழியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது.
நேற்று ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள கோலான் ஹைட்ஸ் பகுதியில் உள்ள கால்பந்து மைதானம் ஒன்றின் மீது குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இஸ்ரேலிய குழந்தைகள், இளைஞர்கள் உட்பட 12 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்காவில் கலந்து கொள்ள இருந்த மீட்டிங்கை ரத்து செய்துவிட்டு இஸ்ரேல் திரும்பியுள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பினரை ஒடுக்க அதிரடி தாக்குதல்களில் ஈடுபட இஸ்ரேல் ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேசமயம் ஹிஸ்புல்லா அமைப்பினர் தங்கள் வழக்கமான பகுதிகளில் இருந்து வெளியேறு ரகசிய பதுங்கு தளங்களில் பதுங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஆனால் இஸ்ரேல் ராணுவம் லெபனான் நாட்டுக்குள் நுழைந்தால் ஒரு முழுமையான போரை இஸ்ரேல் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஈரான் நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் துருக்கி நாட்டின் அதிபரும், பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடுமைகளை இனியும் பொறுக்க மாட்டோம் என பேசியுள்ளார்.
எனவே லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழையும் பச்சத்தில் மத்திய தரைக்கடலில் பெரும் யுத்த மேகம் சூழும் வாய்ப்புள்ளதால் உலக நாடுகள் இடையே அதிர்ச்சி நிலவி வருகிறது.
Edit by Prasanth.K