எங்கள் வேலையை அதிகப்படுத்துவதும் கடினப்படுத்துவதும் அவர்தான்’ என இயக்குநர் மணிரத்னம் குறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கியுள்ள ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.
இந்த விழாவைத் தொகுத்து வழங்கிய பின்னணிப் பாடகி சின்மயி, “மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் - வைரமுத்து கூட்டணி தொடர்ந்து மேஜிக்கலான பாடல்களைத் தந்திருக்கிறது. இந்தப் படத்தில் என்ன ஸ்பெஷல்?” என்று மணிரத்னத்திடம் கேட்டார்.
“ஒன்றல்ல, இரண்டு ஸ்பெஷல்” என தனக்கு இருபுறமும் நின்றிருந்த ஏ.ஆர்.ரஹ்மானையும் வைரமுத்துவையும் கைகாட்டினார் மணிரத்னம். தொடர்ந்து, “ஒரு இயக்குநர் சரியான நபர்களை உடன் வைத்திருந்தால் போதும். மற்ற எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை” என்றார்.
உடனே மைக் பிடித்த வைரமுத்து, “அவர் தன்னடக்கத்துடன் சொல்கிறார். நான் ஒரு உண்மையைச் சொல்கிறேன். எங்கள் வேலையை அதிகப்படுத்துவதும் அவர் தான், கடினப்படுத்துவதும் அவர் தான், எளிமைப்படுத்துவதும் அவர் தான். ஒரு இயக்குநர் என்ன செய்ய வேண்டுமென்றால், நல்ல உள்ளடக்கத்தை இசையமைப்பாளருக்கும் பாடலாசிரியனுக்கும் போதிக்க வேண்டும்.
எங்களை விட்டால் வேற மாதிரி பண்ணுவோம். ஆனால், எது தேவை என்பதை அறிந்து வாங்கக்கூடிய ஆற்றல் இயக்குநர் மணிக்கு உண்டு. ‘இதுதான் தேவை’ என்று தேவையை அறிந்து கேட்டுப் பெறக்கூடிய ஆற்றல் கொண்டவர்.
யானை வேட்டைக்குச் செல்ல வேண்டுமென்றால் வேலோடு செல்ல வேண்டும். மீன் வேட்டைக்குப் போக வேண்டுமென்றால் வலையோடு செல்ல வேண்டும். பல பேர் மாற்றி ஆயுதங்களைக் கொண்டுபோய் விடுகிறார்கள். மீன் வேட்டையா, மான் வேட்டையா என்பது அவருக்குத் தெரியும். அதனால் தான் அவர் வெற்றி பெறுகிறார்” என்றார்.
உடனே, “வைரமுத்துவை இப்படிக் கொஞ்ச நேரம் பேசவிட்டாலே போதும். அதிலிருந்து இரண்டு வரிகள் எடுத்துக் கொண்டால் பாட்டு வந்துவிடும்” என்று மணிரத்னம் சொல்ல, அங்கு சிரிப்பலை எழுந்தது.