Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவின் நடிக்கும் 'ஸ்டார்' பட பத்திரிகையாளர் சந்திப்பு!

J.Durai
வெள்ளி, 3 மே 2024 (14:39 IST)
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஸ்டார்' திரைப்படம் மே 10-ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
 
இதை முன்னிட்டு சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. 
 
இதன் நிகழ்வின் போது தயாரிப்பாளர் சாகர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் பாபின், இணை தயாரிப்பாளர் தீபக், இயக்குநர் இளன், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், நாயகன் கவின், நடிகைகள் அதிதி பொஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன்,  நடிகர்கள் 'ராஜா ராணி' பாண்டியன், தீப்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இயக்குநர் இளன் பேசுகையில் .... 
 
'எனக்கு' மிகவும் எமோஷனலான தருணம் இது. நம் எல்லோரிடத்திலும் கனவு ஒன்று இருக்கும். ஒரு வீடு வாங்க வேண்டும்... ஒரு கார் வாங்க வேண்டும்... கடை ஒன்றை திறந்து வியாபாரம் செய்ய வேண்டும்.. என ஏதாவது ஒரு கனவு இருக்கும் தானே.. அந்த கனவை நோக்கி பயணிக்கிற அனைவருமே ஸ்டார் தான். இதைத்தான் இந்த படம் சொல்கிறது. அந்தப் பயணத்தில் நாம் யாரையும் காயப்படுத்தி விடக் கூடாது. அன்புடன்.. அந்த கனவை விட்டுக் கொடுக்காமல்... பிடிவாதமான மனதுடன்.. அந்தப் பயணம் இருந்து கொண்டே இருக்கும் அல்லவா..! அதைத்தான் இந்த படம் பேசுகிறது.
 
1980 களில் ஒரு பையன்.. அவனுக்கு 20 வயது இருக்கும். பெரிய நடிகராக வேண்டும் என்ற கனவுடன் மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார். எண்பது 90 ஆகிறது. 2000 ஆகிறது. 2010யும் கடக்கிறது. கடந்து போகிறது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேல் இந்த பயணம்  தொடர்கிறது. இப்போது அவருக்கு 55 வயதாகிறது. இந்த வயதில் அவருக்கு 'ராஜா ராணி' எனும் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. பல வருஷமாக தேக்கி வைத்திருந்த அவருடைய கனவு நனவாகிறது. திரையரங்கில் அவருடைய நடிப்பிற்கு ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். அவர்தான் என்னுடைய அப்பா 'ராஜா ராணி' பாண்டியன்.
 
இந்தப் படத்தை அவருக்காக அர்ப்பணிப்பதைத் தான் நான் விரும்புகிறேன். இந்தப் படத்திற்கு இன்ஸ்பிரேஷன்.. என்னுடைய அப்பா தான். அவருடைய இந்த பயணத்தில் ஏராளமான அனுபவங்களை சந்தித்திருப்பார். அவமானங்களை எதிர்கொண்டிருப்பார்
ஒரு முறை என் அப்பா என்னிடம், 'இந்த முகத்தை வைத்துக்கொண்டு எப்படி நடிக்க வந்தாய்?' என ஒருவர் கேட்டுவிட்டதாக வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார். அந்த நபர் கேட்ட அந்த கேள்விதான் என் அப்பாவிற்கு மிகப்பெரிய மோட்டிவேஷனாக இருந்திருக்கிறது. ஒருத்தர் முகத்துக்கு நேராக இப்படி கேட்டுவிட்டாரே..! என்ற ஒரே காரணத்திற்காக, எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற உறுதி அவர் மனதில் ஏற்பட்டு விட்டது.  அந்த மனவுறுதியை விவரிப்பதுதான் இந்த ஸ்டார் திரைப்படம்.
 
ஒரு கனவை நாம் எப்போதும் தனியாக வென்று விட முடியாது. அதற்கு ஆதரவளிக்க நிறைய பேர் தேவை. உதவி செய்வதற்கும் ஆட்கள் தேவை. அதைவிட மற்றவர்களின் ஆசியும் முக்கியம்.‌ இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் கவின், 'காசு இல்ல சார்..!' என டயலாக் பேசுவார். அது எங்க அப்பா வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவம். அதன் போது எங்க அம்மா தான் அவருக்கு ஆதரவாக இருந்து அவரையும் பார்த்துக் கொண்டார். எங்களையும் பார்த்துக் கொண்டார். எங்களை பொறுத்தவரை அவரும் ஒரு ஸ்டார் தான்.
 
அடிப்படையில் நம்மை சுற்றி ஏராளமான ஸ்டார்கள் இருக்கிறார்கள். இவர்களை நினைவுபடுத்தும் வகையில் தான் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது.
 
இதனால் இந்த திரைப்படத்திற்கு அனைவரும் அவர்கள் குடும்பத்தினருடனும், காதலருடனும், நண்பர்களுடனும், உறவுகளுடனும் வருகை தந்து ரசிக்கும் ஒரு அழகான படமாக 'ஸ்டார்' இருக்கும் என நான் நம்புகிறேன்.
 
தயாரிப்பாளர் சாகரிடம் இந்த கதையை சொல்லிவிட்டு இரண்டு நாட்களில் பதிலை சொல்லி விடுங்கள் என நிபந்தனை விதித்தேன். அவர் ஒரே நாளில் இந்த படத்தை தயாரிக்கிறேன் என பதிலளித்தார். அந்தத் தருணத்தில் அவர் எடுத்த விரைவான முடிவு  தான் இன்று வரை எனக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு தருணத்திலும் அவர் எடுக்கும் வேகமான முடிவு இப்படத்தை நேர்த்தியாக உருவாக்குவதற்கும் உதவி இருக்கிறது.
 
அவர் மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக பொறுப்பேற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் தங்களது பணியை முழு அர்ப்பணிப்புடன் செய்து ஒத்துழைப்பு வழங்கினர்.‌ அனைவரும் தங்களின் மனமார்ந்த பங்களிப்பை இப்படத்திற்காக அளித்துள்ளனர். இதற்காக இந்த தருணத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்தத் திரைப்படத்தை நான் ஒரு அழகான காதல் கதையாக தான் பார்க்கிறேன். லவ் என்றதும் ஒரு அப்பாவின் அன்பு... ஒரு அம்மாவின் அன்பு... ஒரு நண்பனின் அன்பு... ஒரு மனைவியின் அன்பு... ஒரு காதலியின் அன்பு... என ஏகப்பட்ட அன்பு இப்படத்தில் இருக்கிறது.
 
இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
குறிப்பாக யுவன் தற்போது துபாயில் இருக்கிறார். நான் என்ன கேட்டாலும் எனக்காக அவர் செய்வார். அவர் என்ன கேட்டாலும் அவருக்காக நான் செய்வேன்.‌ அந்த அளவிற்கு எங்களுக்குள் நட்பு இருக்கிறது. எனக்கு அவர் ஒரு சகோதரர்.. நலம் விரும்பி.. நண்பன்.. ஆன்மீக வழிகாட்டி.. இப்படி அவரைப் பற்றி பட்டியலிட்டு கொண்டே செல்லலாம்.‌  இந்த உலகத்தில் எனக்குப் பிடித்தமானவர்களின் பட்டியலில் யுவன் முதலிடத்தில்  இருக்கிறார். அவரைப் போல ஒருவரை என் வாழ்க்கையில் சந்தித்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன்.‌ அவர் எப்போதும் அன்பாகவும், இனிமையாகவும், எளிமையாகவும் பழகக்கூடியவர்.‌
 
இவரைத் தொடர்ந்து கவின். ஸ்டார் ஆகி இருக்கும் கவினை, 'டாடா' படத்திற்கு பிறகு தான் அவரை சந்திக்கிறேன். இப்படத்தின் கதையை அவரிடம் சொல்லும் போது, முழு கதையும் கேட்டுவிட்டு... 'இந்த கதையில் வரும் பல சம்பவங்கள் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது' என்றார்.  படத்தின் கதை தான் கவினை நாயகனாக தேர்ந்தெடுத்திருக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் கவின் நடிக்கும் போது எங்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருப்பார்.  ஒரு நடிகராக என்னை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பட குழுவினரையும் தன் நேர்த்தியான நடிப்பால் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருப்பார். இதற்கு சாட்சி படத்தின் முன்னோட்டம். இதற்காக கவினுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌
 
இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு சிறிய அளவிலான எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகள் இருக்கிறது. அதை படம் பார்த்த ரசிகர்கள்.. மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அன்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்.'' என்றார் .
 
தயாரிப்பாளர் சாகர் பேசுகையில் ...
 
''இயக்குநர் இளன், 'ஸ்டார்' படத்தின் கதையை சொல்வதற்கு முன்பே அவருடன் தொடர்பில் இருந்தேன். அப்போது காணொளி மூலமாக ஒரு கதையை என்னிடம் சொல்லி இருக்கிறார்.  அவர் கதை சொல்லும் விதம்.. அதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளும் பாணி.. இதெல்லாம் எனக்குப் பிடித்திருந்தது. இது தொடர்பாக எஸ்கியுடிவ் ப்ரொடியூசர் வினோத்திடம் இளனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனச் சொன்னேன்.
 
சிறிது நாள் கழித்து என்னை சந்தித்து ஸ்டார் திரைப்படத்தை உருவாக்கலாமா?  என கேட்டார்.‌ அவர் இந்த படத்தின் கதையை முழுவதுமாக விவரித்தார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. யார் ஹீரோ? என கேட்டேன். அவர் கவின் என்று சொன்னார்.
 
அப்போது 'டாடா' படம் வெளியாகி வெற்றி பெற்றிருந்த தருணம்.  'டாடா' படத்தை பார்க்கும் போதே தமிழ் திரையுலகத்திற்கு நம்பிக்கையான ஒரு நடிகர் கிடைத்திருக்கிறார் என மகிழ்ச்சி அடைந்தேன்.  இளனும் கவின்தான் நாயகன் என்று சொன்னவுடன் நான் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டேன்.
 
அவர் சொன்னது போல் எனக்கு இரண்டு நாள் தான் டைம் கொடுத்தார். அவருக்கு வேறு திசைகளில் இருந்து அழுத்தம் இருந்ததை உணர முடிந்தது. அப்போது இந்த படத்தின் கதை மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இளன்+ கவின் காம்பினேஷன் மீதும் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
 
அண்மையில் இந்தத் திரைப்படத்தை பார்த்தேன். கதையை உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார். எல்லா பிரிவினரும் அன்பாக ஒன்றிணைந்து உருவாக்கிய படைப்பு இந்த ஸ்டார். இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
 
நடிகை அதிதி பொஹங்கர் பேசுகையில்......
 
''இயக்குநர் இளன் திறமையானவர். வசனத்தையும்... வசனத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதையும் .. அதனுடன் உணர்வுபூர்வமாக எப்படி நடிக்க வேண்டியதையும் தெளிவாக குறிப்பிடுவார். இந்தப் படத்தில் சுரபி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் மேடை நாடகத்திலிருந்து வந்திருக்கிறேன். ஒத்திகை முக்கியம் என்பதை நன்கறிவேன். படப்பிடிப்பு தளத்தில் பட குழுவினருடன் பழகிய தருணங்கள் மறக்க இயலாதவை. படக்குழுவினர் அனைவரும் நட்புடன் பழகினர். கவின் ஒரு சக நடிகராக இருந்தாலும்.. மிகத்திறமையானவர்
 
மே பத்தாம் தேதி ஸ்டார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்''என்றார்.
 
நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில்... 
 
இன்று எனக்கு மிகவும் ஸ்பெஷலான நாள். நான் நடித்த முதல் திரைப்படம் வெளியாகிறது. ஓராண்டிற்கு முன் யாராவது என்னை சந்தித்து, 'நீங்கள் தரமான படத்தில் முதன்மையான வேடத்தில் நடிப்பீர்கள்' என்று சொன்னால் ..நான் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் அது இன்று சாத்தியமாகி இருக்கிறது. இதற்காக என்னுடைய பெற்றோருக்கும், வாய்ப்பு அளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும், ஸ்டார் பட குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்த திரைப்படத்தின் நடித்தவுடன் எனக்கு ஓரளவு மன திருப்தி ஏற்பட்டிருக்கிறது. நான் இயக்குநர் இளனின்  வழிகாட்டுதலின்படி தான் நடிகை ஆகியிருக்கிறேன். இந்தப் படம் வெளியான பிறகு கவினுக்கு ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்கும். அவர் பெரிய ஸ்டாராகி விடுவார்.
 
படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் போதெல்லாம் படக்குழுவினரிடம் இருக்கும் பாசிட்டிவிட்டி... என்னை வியப்படையச் செய்தது. இதனால்தான் படங்களை உணர்வு பூர்வமாக உருவாக்க முடிகிறதோ..!  என்றும் எண்ணி இருக்கிறேன். 
 
இந்தப் படத்திலும் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பை வழங்கி இருக்கின்றனர். அதனால் இந்த படம் நிச்சயமாக பெரிய வெற்றியைப் பெறும். '' என்றார்.
 
நடிகர் கவின் பேசுகையில்....
 
''டாடாவிற்கு பிறகு ஸ்டார். இயக்குநர் இளன் கதை சொல்ல வரும்போது அவருடன் எதனையும் எடுத்துக் கொண்டு வரவில்லை. பொதுவாக கதை சொல்ல வரும் இயக்குநர்கள் தங்களது கைகளில் லேப்டாப்... ஒன்லைன் ஆர்டர்.. ஸ்கிரிப்ட் புக்.. என ஏதாவது ஒன்றை கையில் வைத்திருப்பார்கள். மூன்று மணி நேரம் பொறுமையாக.. விரிவாக கதையை சொன்னார்.  அவர் இதயத்தில் இருந்து கதையை சொல்கிறார் என்று கதையை கேட்டு முடிந்த பிறகு தான் தெரிந்தது.  அவர் சொன்ன கதையில் ஜீவன் இயல்பாகவே இருந்தது. பெரிதாக எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன்.
 
படத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை.. என்னை தேடி வந்து கதை சொன்ன பிறகு வைத்த நம்பிக்கை.. என அனைத்தையும் காப்பாற்றி இருக்கிறேன் என நினைக்கிறேன்.
 
படத்தின் இணை தயாரிப்பாளர் தீபக் வெளிநாட்டில் தான் இருப்பார். ஆனால் படப்பிடிப்பு பணிகளை நேர்த்தியாக அங்கிருந்தே ஒருங்கிணைத்து விடுவார்.
 
இந்தப் படத்தின் கதையை கேட்டு முடித்தவுடன் மிகவும் பொறுமை தேவை என்பதை உணர்ந்தேன். படைப்பும் பெரிது. அதற்கான உழைப்பும் நேரமும் அதிகம்.  அனைவரும் இதனைப் புரிந்து கொண்டு பொறுமையாக இருந்து பணியாற்றியதற்காக இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 
 
நான் விக்ரம் பிரபுவுடன் இணைந்து 'ஷத்ரியன்' என்றொரு படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தில் யுவன் இசையில் எனக்கொரு பாடல் காட்சியும் இருந்தது. அது படமாக்கப்பட்டது. பிறகு படத்தொகுப்பில் நீக்கப்பட்டது.  நான் நடித்த முதல் படம். அதில் பாடல் காட்சி நீக்கப்பட்டதால்.. மனதில் வலி இருந்தது. யுவனை நேரில் சந்திக்கும் போது இதைப்பற்றி விவரித்தேன்.
 
பொதுவாக ஆறுதலுக்காக சொல்வார்கள் அல்லவா... 'இன்று நடக்கவில்லை என்றால், நாளை இதைவிட பெரிதாக நடக்கும் என்று'... அதைப் பற்றிய தவறான புரிதல் எனக்குள் இருந்தது. ஆனால் அந்த வார்த்தைகள் எல்லாம் உண்மைதான் என்பது இப்படத்தில் தெரிந்து கொண்டேன்.  யுவன் சங்கர் ராஜா இசை என்றவுடன் என்னுடைய ஆசையும், கனவும் நிறைவேறிவிட்டது.  இந்த படத்திற்காகவே யுவன் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். அதை நீங்கள் முன்னோட்டத்திலேயே பார்த்து ரசித்திருக்கலாம். படம் பார்க்கும்போதும் அவருடைய உழைப்பு உங்களுக்கு தெரிய வரும் என நினைக்கிறேன்.
 
எழில் அரசு தான் ஒளிப்பதிவு என்றவுடன்.. எனக்கு முழு நம்பிக்கை வந்து விட்டது. ஏனென்றால் 'டாடா' படத்திற்கு அவர்தான் ஒளிப்பதிவாளர். 
 
படத்தின் கதை யதார்த்தமாக இருக்கும். அதில் இடம்பெறும் சின்ன சின்ன சண்டை காட்சிகளும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக சண்டை பயிற்சி இயக்குநர் விக்கி மாஸ்டர் கடினமாக உழைத்திருக்கிறார்.
 
எனக்கு டான்ஸ் மாஸ்டர் என்றால் பயம் தான். எனக்கு நடிப்பின் மீது இருக்கும் நம்பிக்கை... நடனத்தின் மீது இல்லை. நிறைய ஒத்திகையை பார்ப்பேன்.  இந்தப் படத்தில் மூன்று டான்ஸ் மாஸ்டர்களும் எனக்காக பொறுமையுடன் சொல்லிக் கொடுத்து நடனமாட வைத்தார்கள்.
 
லால் மற்றும் கீதா கைலாசம் இருவரும் நடித்திருக்கும் காட்சிகள் உயிரோட்டமாக இருக்கும். அதில் அவர்களின் அனுபவிக்க நடிப்பு மேலும் யதார்த்தமாகவும், அழகாகவும் இருக்கும். இது ரசிகர்களிடமும் சரியாக பிரதிபலிக்கும் என நம்புகிறேன்.
 
படத்தில் நடித்த சக நடிகைகளான பிரீத்தி மற்றும் அதிதிக்கும் நன்றி. உடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் நடித்த அனைவரும் திரையுலகத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
 
ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. ஏனெனில் நல்ல கன்டென்ட் இருந்தால் அந்தப் படத்திற்கு நீங்கள் அபரிமிதமான ஆதரவை தருவீர்கள். இதற்கு 'டாடா' உட்பட பல படங்களை உதாரணமாக சொல்லலாம்.
 
இவற்றையெல்லாம் கடந்து ஒரே ஒரு சிறிய விசயத்தை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 'சினிமாவை வைத்து சினிமா எடுத்தால் ஒடாது' என பொதுவாக சொல்வார்கள். இது எந்த அளவிற்கு உண்மை என எனக்குத் தெரியவில்லை. படம் நன்றாக இருந்தால் ஓடும். ஓடியிருக்கிறது. ஆனால் இது போன்ற விசயம் எப்படி உருவாகிறது என தெரியவில்லை. ஒருவேளை ஒட்டுமொத்த சதவீதத்தின் அடிப்படையில் சொல்லி இருக்கலாம் என நினைக்கிறேன்.
 
இந்தப் படத்திற்கும் அது நடந்தது. தயாரிப்பாளர் சாகரிடம் கதை செல்வதற்கு முன் சிலர் இந்த விசயத்தை சொன்னார்கள். அதுவரைக்கும் நான் மிகவும் நம்பிக்கையாக தான் இருந்தேன். தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகரும் கதையைக் கேட்டு விட்டு .. இது போன்ற கருத்தை சொல்லி விடுவாரோ..!  என பயந்தேன்.  ஆனால் இந்த படத்தை தயாரிக்க ஒரே நாளில் அவர் ஒப்புக்கொண்டவுடன் எனக்கு இருந்த பயம் விலகி, நம்பிக்கை அதிகரித்து விட்டது.  கலையை கலையாக பார்க்கிற.. அதை மிகவும் நேசிக்கிற.. பட குழு மீது தயாரிப்பாளர் நம்பிக்கை வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கை தான் இந்த படத்தை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது என நினைக்கிறேன். அந்த விசயங்களை எல்லாம் கடந்து இந்த படைப்பின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைதான் வெற்றியை தரும் என நம்புகிறேன்.
 
ரசிகர்கள் மீதும் பெரும் நம்பிக்கை இருக்கிறது. தயாரிப்பாளர்களின் முதலீட்டிற்கும், ரசிகர்களின் முதலீட்டிற்கும் நியாயமாக உழைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய குரு எனக்கு  சொல்லிக் கொடுத்திருக்கிறார். இதற்காகவே ஒட்டுமொத்த பட குழுவும் நம்பிக்கையுடன் பணியாற்றியிருக்கிறது.
 
இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல முறையில் ஓடி.. சினிமாவைப் பற்றி சினிமா எடுத்தால் ஓடும் என்கிற பட்டியலில் இந்த திரைப்படம் இடம் பெறும். இதை நான் ஆத்மார்த்தமாக நம்புகிறேன். '' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலர்ஃபுல் ட்ரஸ்ஸில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வாணி போஜனின் லேட்டஸ்ட் அசரடிக்கும் போட்டோஷூட் ஆல்பம்!

நரகத்துல இருக்குறவனுக்கு சொர்க்கத்தோட சாவி கெடச்சா..?.. எதிர்பார்ப்பைக் கூட்டும் சொர்க்கவாசல் டிரைலர்!

தளபதி 69 பட ஷூட்டிங்கை சீக்கிரம் முடிக்க விஜய் உத்தரவு.. பின்னணி என்ன?

சினிமாவில் 40 ஆண்டுகள் நிறைவு… சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ ரி ரிலீஸ்… !

அடுத்த கட்டுரையில்
Show comments