தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் கமல், சிம்பு, சிவகார்த்திகேயன், ஜி.வி. பிரகாஷ் ஆகிய சினிமா நட்சத்திரங்கள் குரல் கொடுத்துள்ளனர். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் மவுனமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
சிவகார்த்திகேயன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ட்விட்டரில் 'ஏறுதழுவுதல் நம் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு. அதை மீட்க விரும்பும் பல கோடிபேரில் ஒரு தமிழனாய் நானும் என பதிவிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொம்புவச்ச சிங்கம்டா பாடலை வெளியிடுகிறார் ஜி.வி. பிரகாஷ். ஜல்லிக்கட்டு என்று கூறுவதை விட ஏறுதழுவுதல் என்று கூறுவதே சரியானதாக இருக்கும் என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
சிம்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முதலில் அறிக்கை வெளியிட்டதோடு, ட்விட்டரிலும் தனது ப்ரொபைல் படம் மூலமும் ஜல்லிக்கட்டை ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டாரா? என்று வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.