லிங்குசாமியின் அஞ்சான் படத்தில் கரீனா கபூர் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் என்று செய்தி வெளியானதைத் தொடர்ந்து ஒரு பிரபல பத்திரிகை இது குறித்து கரீனா கபூரிடம் கேட்டது. அதற்கு பதிலளித்தவர், எப்படி ஆதாரமற்ற இதுபோன்ற செய்திகள் வருகிறது என்றே தெரியவில்லை. சூர்யா, லிங்குசாமியெல்லாம் யார்? அவர்களைப் பற்றி கேள்விப்பட்டதேயில்லை என்றார் தடாலடியாக.
கரீனா கபூரின் இந்த அம்னீஷியா ஸ்டேட்மெண்ட் எல்லா ஊடகங்களிலும் விமர்சிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனது அம்னீஷியா தோசையை அவராகவே திருப்பிப் போட்டுள்ளார்.
நான் இதுவரை சூர்யாவை சந்தித்ததில்லை. அதற்காக அவரை எனக்கு தெரியாது என்று அர்த்தமில்லை. நிச்சயமாக... அவரை எனக்குத் தெரியும். தமிழ் சினிமாவின் பெரிய நடிகர். அவர் தமிழில் நடித்த படத்தின் சீக்வெலில்தான் நான் தற்போது நடித்து வருகிறேன். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சிக்கும், கௌரவத்துக்கும் உரியது என கரீனா கபூர் கூறியுள்ளார்.
ஆனால் கடைசிவரை லிங்குசாமியை குறித்து மட்டும் அவர் எந்த விளக்கமும் சொல்லவில்லை. உண்மையாகவே லிங்குசாமியை கரீனாவுக்கு தெரியாதோ?