Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மைக்கேல் பெல்ப்ஸ்... ஓர் அசாத்திய வீரரின் சிறப்புகள்!

எஸ்.ஆர்.ராஜசேகர்

மைக்கேல் பெல்ப்ஸ்... ஓர் அசாத்திய வீரரின் சிறப்புகள்!
PTI PhotoFILE
பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டியில் 5 தங்கப் பதக்கங்கள் (ஆகஸ்ட் 13ஆம் தேதி நிலவரப்படி) வென்றதன் மூலம் மொத்தம் 11 ஒலிம்பிக் தங்கங்களை வென்று உலகின் தலைசிறந்த ஒலிம்பிக் நீச்சல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள மைக்கேல் பெல்ப்ஸ் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.

தந்தை ஃப்ரெட் காவல்துறை அதிகாரி. தாய் டெப்பி ஆசிரியை. பெல்ப்சின் மூத்த சகோதரி விட்னியும் நீச்சல் வீராங்கனை. பெல்ப்ஸுக்கு 7 வயதாக இருந்த போதே அவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

பயிற்சியாளர் பாப் பவ்மென், 11 வயதில் மைக்கேல் பெல்ப்ஸ்-ஐ பார்த்தார். அந்த கணமே பவ்மெனின் மனதில், பெல்பஸ் உலக சாம்பியனாக நிச்சயம் வருவார் எனத் தெரிந்து விட்டது.

இதையடுத்து அவரது பெற்றோரிடம் பேசிய பவ்மென், “பெல்ப்ஸ் மனது வைத்தால் உலகின் தலைசிறந்த நீச்சல் வீரனாக முன்னேற முடியும” என தன் மனதில் தோன்றியதை பக்குவமாக எடுத்துரைத்தார். அவர் அன்று சொன்ன வார்த்தை, ஆகஸ்ட் 13ஆம் தேதி உலகமே வியக்கும் வண்ணம் பீஜிங்கில் நிறைவேறியுள்ளது.

webdunia
PTI PhotoFILE
வெற்றியின் ரகசியம்: போட்டியிடும் மனப்பான்மை, மிக சிறப்பான உடல் தகுதியே பெல்ப்ஸ் சாதனையின் ரகசியம் என்று பயிற்சியாளர் பாப் பவ்மென் கூறியுள்ளார்.

உடல் தகுதி என்று பவ்மென் குறிப்பிட்டத்தை கூர்ந்து கவனித்தால் அதன் உள் அர்த்தம் புரியும். ஒரு காமிக்ஸ் புத்தகத்தில் வரையப்படும் கதாபாத்திரம் போல் செதுக்கப்பட்ட உடல், அகண்ட தோள்கள், மிக நீளமான கைகள் உள்ளிட்ட உடல் அம்சங்கள் நீச்சலில் அவருக்கு பேருதவியாக இருந்துள்ளது.

மொத்தம் 6 அடி 4 அங்குலம் உயரமுடைய பெல்ப்ஸ்-ன் கைகள் மற்றவர்களைக் காட்டிலும் சற்றே நீளமானது என்பதால், உயரத்திற்கு ஏற்ற அளவை விட 3 அங்குலம் கூடுதலான தூரத்தை எட்டக் கூடிய சிறப்புத் தகுதியை பெல்ப்ஸ் பெற்றிருந்தார் என்பது சிலருக்கே தெரிந்த விஷயம்.

நீச்சல் போட்டிகளில் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்லும் வீரர்கள் அங்கிருந்து திரும்பி வர நீருக்குள்ளேயே ஒரு குட்டிக்கரணம் அடித்து கால்களால் சுவரை உதைத்து ஒரு உந்துதலை உருவாக்கி மீண்டும் நீந்திச் செல்வர். இந்த விஷயத்திலும் பெல்ப்ஸ் சற்றே வித்தியாசமானவர்.

மற்ற நீச்சல் வீரர்களைப் போல் குட்டிக்கரணம் அடிக்கும் போது பெல்ப்ஸ் அதிக ஆழத்திற்கு செல்ல மாட்டார். நீரின் மேல்மட்டத்தில் இருப்பதால் நீரின் ஈர்ப்பு விசை மிகக் குறைவாக இருக்கும். இதன் காரணமாக மற்ற வீரர்கள் கால்களால் சுவரை உதைத்து...

webdunia
PTI PhotoFILE
கடக்கும் தூரத்தை விட பெல்ப்ஸ் சற்றே அதிக தூரம் செல்ல முடிகிறது.

இந்த சூட்சுமத்தை பெல்ப்ஸ் நீண்ட காலமாக பயன்படுத்தி வருவதாக அமெரிக்க நீச்சல் குழுவின் உடல்-இயக்க (biomechanics) ஒருங்கிணைப்பாளர் ரஸல் மார்க் உறுதி செய்துள்ளார்.

இதுபோன்ற சிறுசிறு விஷயங்களில் கவனம் செலுத்தி தனித்துவத்தை ஏற்படுத்திக் கொண்ட காரணத்தாலேயே பெல்ப்ஸ் அதிகளவு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்திற்கும், பல உலக சாதனைகளுக்கும் சொந்தக்காரராகி இருக்கிறார்.

வேற்று கிரகவாசி: பீஜிங்கில் இன்று நடந்த 4x200 மீட்டர் ஃப்ரீ-ஸ்டைல் ரிலே நீச்சல் போட்டியில், பெல்ப்ஸ் உள்ளிட்ட 4 அமெரிக்க வீரர்கள் அடங்கிய நீச்சல் குழு புதிய உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றது. (இது பெல்ப்ஸ்-க்கு 11வது ஒலிம்பிக் தங்கம்).

இப்போட்டியில் 2வது இடத்தை பிடித்த ரஷ்ய நீச்சல் வீரர்கள் குழுவில் இடம்பெற்ற அலெக்சாண்டர் சுகோருகோவ், பெல்ப்ஸ் பற்றி உதிர்த்த வார்த்தைதான் “வேற்று கிரகவாசி”

பெல்ப்ஸ் மனிதப் பிறவியாக இருந்தாலும், அவர் வேற்று கிரகத்தைச் சேர்ந்தவர் தான்; வேற்று கிரகம் என்பதை விட வேறு பால்வீதி என்று கூட வைத்துக் கொள்ளலாம் என்று பெல்ப்சுக்கு புது இலக்கணமே வகுத்துள்ளார்.

webdunia
PTI PhotoFILE
பெடரர் பாராட்டு: பிற துறையைச் சேர்ந்த ஒரு பிரபலம் மற்றொரு துறையை சேர்ந்த ஜாம்பவானைப் பாராட்டுவது, பாராட்டு பெறுபவரின் சிறப்பை மேலும் வெளிப்படுத்தும். அந்த வகையில் டென்னிஸ் உலகில் முடிசூடா மன்னராக தற்போது திகழ்ந்து வரும் நியூசிலாந்து வீரர் ரோஜர் பெடரரிடம் பாராட்டு பெற்றுள்ளது, பெல்ப்ஸுக்கு கிடைத்த கூடுதல் அங்கீகாரமாக கருதப்படுகிறது.

பெல்ப்ஸ் தற்போது செய்துள்ள சாதனைகள் சற்றும் நம்ப முடியாததாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து பல சாதனைகளை பல்வேறு நீச்சல் போட்டிகளில் நிகழ்த்தியதன் மூலம், உலகின் சிறந்த ஒலிம்பிக் வீரர் என்ற பெருமையை பெல்ப்ஸ் பெற்றுள்ளதாக பெடரர் புகழ்ந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil