சிட்னியில் நடைபெறும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் 5-வது, இறுதி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று ஆஸ்ட்ரேலியா தன் முதல் இன்னிங்ஸில் 280 ரன்களுக்குச் சுருண்டது.
134/4 என்று துவங்கிய ஆஸ்ட்ரேலிய அணி விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் விக்கெட்டை அவரது சொந்த எண்ணிக்கையான 6 ரன்களில் ஆண்டர்சனிடம் இழந்தது.
முக்கிய வீரர் மைக் ஹஸ்ஸி முதல் நாள் ஸ்கோரிலிருந்து 9 ரன்கள் மட்டுமே கூடுதலாகச் சேர்த்த நிலையில் 33 ரன்களில் பால் காலிங்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஸ்டீவ் ஸ்மித் 18 ரன்கள் எடுத்து ஆண்டர்சன் பந்தில் காலிங்வுட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
உடனடியாக பீட்டர் சிடிலும் 2 ரன்களில் ஆண்டர்சனிடம் வீழ்ந்து விட ஆஸ்ட்ரேலியா 189/8 என்று ஆனது.
ஆனால் அதன் பிறகு மிட்செல் ஜான்சன் அபாரமாக விளையாடி 5 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 53 ரன்கள் விளாசினார்.
ஹில்ஃபென் ஹாஸ் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 34 ரன்கள் எடுத்தார். ஜான்சனும் இவரும் இணைந்து 9-வது விக்கெட்டுக்கு 76 ரன்களைச் சேர்த்தனர்.
ஜான்சன் 53 ரன்களில் பிரெஸ்னன் பந்தில் ஆட்டமிழந்தார். ஹில்ஃபென் ஹாஸ், ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளையும், பிரெஸ்னன் 3 விக்கெட்டுகளையும், டிரெம்லெட், ஸ்வான், காலிங்வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்ற ஆஸ்ட்ரேலியா 280 ரன்களுக்குச் சுருண்டது.
இங்கிலாந்து தன் முதல் இன்னிங்ஸில் சற்று முன் வரை ஸ்ட்ராஸ், டிராட் விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
ஸ்ட்ராஸ் அதிரடி முறையில் ஆடி 58 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து ஹில்ஃபென் ஹாஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
அபாய வீரர் டிராட் 0-த்தில் ஜான்சன் பந்தில் பவுல்டு ஆனார். தற்போது பீட்டர்சன் 26 ரன்களுடனும் அலிஸ்டைர் குக் 46 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.